பந்தலில் சொல்லி அடிக்கும் பீர்க்கன்! மாற்றி யோசிக்கும் விவசாயிகள் அசத்தல்

தினமலர்  தினமலர்
பந்தலில் சொல்லி அடிக்கும் பீர்க்கன்! மாற்றி யோசிக்கும் விவசாயிகள் அசத்தல்

பொள்ளாச்சி:கிணத்துக்கடவு சேரிபாளையத்தை சேர்ந்த விவசாயி மயில்சாமி, பாசன நிலத்தில் வெங்காயம் சாகுபடி மேற்கொண்டிருந்தவர் தற்போது, பந்தல் சாகுபடிக்கு மாறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது: மண்ணின் மகத்துவம் அறிந்ததால், அதனால், மண்ணுக்கு ஏற்ற பயிர் சாகுபடியை மேற்கொள்வதோடு, சத்துக்குறையாமல் இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன்.
அதற்காகவே, 1.25 ஏக்கர் நிலத்தில், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி, வீரிய ரக பீர்க்கன் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டு ரக விதைகள் கிடைப்பது அரிதாகியுள்ளதால் 'சுவரெட்' ரக விதை நடவு செய்யப்பட்டது. ஒரே வட்டபாத்தியில், மூன்று விதைகள் நடவு செய்யப்பட்டாலும், கொடிகள் வேறு,வேறு இடங்களில் படர விடப்பட்டுள்ளது. அவ்வப்போது, சொட்டு நீரில், திரவ ஊட்டச்சத்து மருந்துகளும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் மருந்தும் செலுத்தப்படுகிறது. அதனால், செடிகள் கரும்பச்சையாக மாற்றமடைகிறது.சமீபத்தில் நடவு செய்யப்பட்ட பீர்க்கன் விதை, 40 நாட்களில் கொடியாக படர்ந்து, 45வது நாளில் இருந்து காய்ப்பு துவக்கி, தொடர்ந்து, 60 நாட்கள் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு நாள் இடைவெளி அறுவடையின் ஆரம்ப நாட்களில், 800 கிலோ வரை ஆதாயம் கிடைக்கிறது. இருப்பினும், பந்தலில் பீர்க்கன் சாகுபடியில் ஏக்கருக்கு, 14 - 15 டன் ஆதாயம் கிடைக்கிறது. வியாபாரிகள் நேரடியாக, அறுவடை செய்யும் இடத்துக்கே வந்து, எடைபோட்டு கொள்முதல் செய்து கொள்கின்றனர். அறுவடையின்போது விலை இருந்தால், லாபம் பார்க்கலாம் ஆனாலும், சாகுபடியில் இழப்பில்லை.

மூலக்கதை