இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகள் தப்ப முடியாது!விபத்து இழப்பீடுக்கு விதியில் திருத்தம்

தினமலர்  தினமலர்
இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகள் தப்ப முடியாது!விபத்து இழப்பீடுக்கு விதியில் திருத்தம்

கோவை:இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டால், இழப்பீடு தொகையை வாகன உரிமையாளர் செலுத்தும் வரை, சம்பந்தப்பட்ட வாகனத்தை விடுவிக்கக்கூடாது என்று, விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்தவுடன், பலரும் கேட்கும் கேள்வி, 'வண்டிக்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா' என்பதுதான். வாகனங்களை இன்சூரன்ஸ் செய்து கொள்வதன் மூலம், விபத்து ஏற்படுத்துவோருக்கும், விபத்தில் பாதிக்கப்படுவோருக்கும், பாதுகாப்பு கிடைக்கிறது.ஆனால், வாகன ஓட்டிகள் பலர் அதை செய்வதில்லை. காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்காமலே, வாகனம் ஓட்டுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இப்படி ஓட்டும் வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, இரு தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.எந்த தவறுமே செய்யாத, அப்பாவிகளும் பாதிப்புக்கு ஆளாவதை கருத்தில் கொண்டு, விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர, அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய விதிகளில், திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கை, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.என்ன சொல்கிறது அந்த விதி?திருத்தம் செய்யப்பட்ட விதியில், 'விபத்தில் சிக்கிய வாகனத்துக்கு, இன்சூரன்ஸ் இல்லையெனில், அதன் உரிமையாளர், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க போதுமான உத்தரவாதம் அளித்துள்ளார் என்று நீதிமன்றம் திருப்தி அடைந்தால் தவிர, வாகனத்தை விடுவிக்கக்கூடாது' என்று கூறப்பட்டுள்ளது.
'அவ்வாறு உத்தரவாதம் தரப்படாத நிலையில், அந்த வாகனம், மாஜிஸ்திரேட் மூலம் பொது ஏலத்தில் விடப்பட வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை, விபத்துக்கான இழப்பீடு வழங்கும் தீர்ப்பாயத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்றும், புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரைவு திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டதில் இருந்து, 30 நாட்களுக்கு பிறகு, அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்கு ஆட்சேபம் அல்லது ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளருக்கு தெரிவிக்கலாம் என்று, அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'வரவேற்கலாம் 'கோவையில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை நடத்தும் வக்கீல் ரகுமான் கூறுகையில், ''புதிதாக கொண்டு வரப்பட உள்ள விதிமுறை, மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம், வாகன விபத்தில் பாதிக்கப்படுபவரின் குறைந்தபட்ச மருத்துவ செலவுகளுக்காவது, இழப்பீட்டுத்தொகை கிடைப்பது உறுதி செய்யப்படும்,'' என்றார்.

மூலக்கதை