1891-ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்டலப் புயல் உருவாகுவது இதுவே முதல் முறை : 'நிசார்கா' புயல் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்..

தினகரன்  தினகரன்
1891ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமண்டலப் புயல் உருவாகுவது இதுவே முதல் முறை : நிசார்கா புயல் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்..

டெல்லி :  அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் நிசர்கா புயல் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என்றும் நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் மகாராஷ்டிராவைக் கடக்கும்போது, மும்பையிலும் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையைத் தவிர தானே, கல்யாண் டோம்பிவ்லி, வசாய் விரார், நவி மும்பை, மீரா பயந்தர், பத்லாப்பூர், அம்பர்நாத், பன்வெல் போன்ற நகரங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.தற்போது நிசார்கா புயல், மும்பையில் இருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், ஜூன் 3 -ம் தேதி கரையைக் கடக்கும்போது, மகாராஷ்டிராவில் 105 - 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், இதன் காரணமாக நாளை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மீனவர்கள், அடுத்த சில நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே \'மகாராஷ்டிரா மற்றும் மும்பையை 1891-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஜூன் மாத வெப்பமண்டலப் புயலும் தாக்கவில்லை. 1948 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் இரண்டு வெப்பமண்டல புயல்கள் மும்பையை நெருங்கி வந்த அவை சூறாவளியாக மாறவில்லை\' என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் அக்‌ஷய் தியோரஸ் தெரிவித்துள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை \'ஆம்பன்\' புயல் தாக்கியது. 2020 ஆண்டு பிறந்ததில் இருந்து இந்தியா எதிர்கொள்ள இருக்கும் இரண்டாவது புயல் இது எனலாம்.

மூலக்கதை