கொரோனாவுக்கான மருந்து: ரஷ்யா அடுத்த வாரம் சோதனை

தினமலர்  தினமலர்
கொரோனாவுக்கான மருந்து: ரஷ்யா அடுத்த வாரம் சோதனை

மாஸ்கோ: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை வரும் ஜூன் 11ம் தேதி மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்க உள்ளனர்.


கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இங்கு தற்போது கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிவிட்டது. 4,855 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடும் போது ரஷ்யாவில் சற்று குறைவாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை வரும் வாரத்தில், அதாவது ஜூன் 11ம் தேதி முதல் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க உள்ளனர். ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதி உதவியுடன் கெம்ரார் என்ற மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்ற ஆன்டிவைரல் மருந்தினை தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜூன் 11 முதல் நோயாளிகளுக்கு இம்மருந்து வழங்கப்படும் என ஆர்டிஐஎப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ' இம்மருந்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். 1990ம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபேவிபிரிவிர் எனப்படும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அஃபிபேவிர் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது' இவ்வாறு கிரில் திமித்ரியேவ் தெரிவித்தார்.

மூலக்கதை