ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வராத இந்த அபாயகரமான சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதை விட தள்ளி வைத்ததுதான் நல்லது என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார். இது குறித்து அஜய் சிங் கூறியதாவது: கூட்டமைப்பின் சிறப்பான செயல்பாடுகள், பயிற்சியாளர்களின்  விடா முயற்சி மற்றும்  குத்துச்சண்டை வீரர்களின் திறமைகளால்  நாம் முன்னேறி வருகிறாம். அதனால் ஒலிம்பிக் போட்டியில்  குத்துச்சண்டை வீரர்களுக்கான 13  இடஒதுக்கீட்டு இடங்களையும் நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்கனவே 9  இடங்களை உறுதி செய்துள்ளோம்.  அதற்கு வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்களும்,  கூட்டமைப்பின் முயற்சிகளும் காரணம்.  அதனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒலிம்பிக் போட்டியில் நமது குத்துச்சண்டை வீரர்கள் சாதிப்பார்கள்.  பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பல்வேறு நவீன, அறிவியல் பூர்வமான, உலக தரத்திலான  பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்தில் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி தந்த முதல் சங்கம் நமது  பிஎப்ஐதான்.  நமது வீரர்களின் மன உறுதியை , உடல் தகுதியை,  குறையாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் தொடங்க உள்ள தேசிய முகாமில் எல்லாம் முழுமையாகும். அதனால் ஊரடங்கு நமது வெற்றியை பாதித்து விடாது.சற்றும் அனுபவமில்லாத, அபாயகரமான சூழ்நிலை இது.  கொரோனா  உலகை முடக்கி வைத்துள்ளது. அதனால்   ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்தது சிறந்த முடிவாகும். விமர்சனங்கள் எப்படி  வேண்டுமானலும் இருக்கலாம். இது வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள், ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. அதே நேரத்தில் நமது வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.  ஒலிம்பிக் தள்ளிப்போனதால் பதக்கங்கள் குவிக்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏதுமில்லை. இந்த நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றி விடாது.  மேலும் கடினமாக உழைக்க, கூடுதலாக பயிற்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அஜய்சிங் கூறினார்.இந்தியாவில் 2021ம் ஆண்டு  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்  போட்டி நடைபெறுவதாக இருந்தது. போட்டிக்கான கட்டணத்தை  செலுத்தவில்லை என்பதால் இந்தியாவில் நடைபெறும் போட்டியை ரத்து செய்வதாகவும், அதற்கு பதில் செர்பியாவில் நடைபெறும் என்று உலக குத்துச்சண்டை அமைப்பு (ஏஐபிஏ) அறிவித்து விட்டது. இது குறித்து அஜய் சிங்கிடம் கேட்ட போது, ‘ஏஐபிஏவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.  ஊரடங்கு காரணமாக போட்டிக்கான கட்டணத்தை செலுத்துவது  சவாலாக  இருந்தது. செர்பியாவில் உள்ள ஏஐபிஏ கணக்குக்கு இந்தியாவில் இருந்து பணம் செலுத்துவது பிரச்னை. இந்த பிரச்னையை தீர்க்கும் முடிவில் இருக்கிறோம். நிலுவைத் தொகையில் முதல் 2 தவணைகளை  ஏற்கனவே செலுத்தி விட்டோம்.  மேலும் 3வது தவணையை சில நாட்களில் செலுத்திவிடுவோம்.  கருத்து வேறுபாடுகள் தீரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்படி ஏதாவது இருந்தால் இருதரப்பும் உட்கார்ந்து பேசி தீர்வு காணுவோம்’ என்றார்.

மூலக்கதை