வெள்ளை மாளிகையை சுற்றி வன்முறை போராட்டம்; பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் தஞ்சம்: அமெரிக்காவில் 25 நகரங்களில் ஊரடங்கு அமல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெள்ளை மாளிகையை சுற்றி வன்முறை போராட்டம்; பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் தஞ்சம்: அமெரிக்காவில் 25 நகரங்களில் ஊரடங்கு அமல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை சுற்றி வன்முறை போராட்டம் நடைபெற்று வரும்நிலையில், மாளிகையின் பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 25 நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் என்ற இடத்தில் கருப்பின காவலாளியை சில போலீசார் கடுமையாகத் தாக்கினர். அதில், ஜார்ஜ் பிளாய்ட் என்ற இளைஞர் போலீசாரால் கழுத்தில் காலால் அழுத்தி கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை நீடிப்பதாகக் கூறி பல்வேறு இடங்களிலும் காவலரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன.

மின்னசொட்டா மாநிலத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, மியாமி உட்பட பல்வேறு நகரங்களிலும் 3வது நாளாக போராட்டம் வலுவடைந்து வருகிறது.

போராட்டங்களின் போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதனால் அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலீஸ், பிலடெல்பியா, டென்வர், சின்சினாட்டி, போர்ட்லேண்ட், லூயிஸ்வில், கெண்டக்கி, ஓரேகான் ஆகிய 25 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி அப்பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.

இதனிடையே வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடுப்புகளைத் தாண்டி முன்னேறிய அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகை முன் ராணுவ கவச வாகனங்கள், டேங்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜார்ஜ் பிளாயிட்டின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து ஜார்ஜ் பிளாயிட் மரணத்திற்கு நீதிகேட்டும், கருப்பின மக்களும் வாழவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகையின் அருகே நிலைமை மோசமடைந்து வருவதால், பாதுகாப்பு பணியில் இருந்த ரகசிய சேவை ஏஜென்சி முகவர்கள், அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள பாதுகாப்பு பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்றனர்.

அதனால், டிரம்ப் அங்கிருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இருந்தும், வாஷிங்டன் போலீஸ் வெள்ளை மாளிகையைச் சுற்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை விரட்டியது.

தொடர்ந்து கலவரம், வன்முறை, போராட்டம் போன்ற காரணங்களால் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்து வருவதால், ராணுவம் தயார் நிலையில் இருக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை