வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளுக்கு வாய்ப்பு?: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்...!

தினகரன்  தினகரன்
வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளுக்கு வாய்ப்பு?: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்...!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கு நேற்று இரவுடன் முடிந்த நிலையில், ஜூன் 1 முதல் முழு விலக்கு அளிக்கப்படுமா அல்லது 5ம் கட்டமாக ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இது பற்றி மாநில முதல்வர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில், பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை 2 வாரத்துக்கு நீட்டிக்கும்படி வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, ஊரடங்கு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், இதில், யாரும் எதிர்பாராத வகையில் தேசிய ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், பாதிப்பு அதிகமுள்ள நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி ஜூலையில் முடிவு செய்யப்பட உள்ளது. மேலும், இரவு 9 முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்தப்படி மாநில அரசுகளும் ஜூன் 30-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று 11.30 மணிக்கு நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று கடந்த 30-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-வது ஆட்சி காலத்தில் இரண்டாம் ஆண்டின் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை