சித்தூர் மாவட்டத்தில் படையெடுப்பு முள்ளங்கி, பீன்ஸ் செடிகளை பதம் பார்த்த வெட்டுக்கிளிகள்

தினகரன்  தினகரன்
சித்தூர் மாவட்டத்தில் படையெடுப்பு முள்ளங்கி, பீன்ஸ் செடிகளை பதம் பார்த்த வெட்டுக்கிளிகள்

சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் வேப்பனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட செடிகளை விளைவித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அங்கு ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அவற்றையெல்லாம் சாப்பிட்டு சேதப்படுத்தி உள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியம் உடனடியாக இதுபற்றி குப்பம் மண்டலத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வேளாண் அதிகாரி சிவகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது வெட்டுக்கிளிகள் அந்த செடிகள் மீது அமர்ந்து அதை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. என்னசெய்வது என்று தெரியாத அதிகாரிகள் உடனே சித்தூர் மாவட்ட வேளாண் துறை அதிகாரி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் அங்கு வந்து ஆய்வு நடத்தினார்.  பின்னர் அவர் கூறுகையில், ‘ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்த வெட்டுக்கிளிகள் முதலில் தெலங்கானாவிற்கு படையெடுத்து அங்கு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பொருட்களை சேதப்படுத்தியது. ஆந்திர மாநிலத்திற்கு வெட்டுக்கிளிகள் வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தற்போது குப்பம் மண்டலத்தில் படையெடுத்து வந்து விவசாய நிலங்களில் பயிரிட்ட பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தி உள்ளது. விரைவில் மாவட்டத்தின் வேறு எந்த இடத்திற்கும் செல்லாத வகையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அவற்றை அழிப்போம். எனவே விவசாயிகள் யாரும் அச்சமடைய வேண்டாம்’ என்றார்.

மூலக்கதை