கறுப்பினத்தவர்கள் போராட்டம்; ராணுவத்தை அனுப்ப டிரம்ப் முடிவு

தினமலர்  தினமலர்
கறுப்பினத்தவர்கள் போராட்டம்; ராணுவத்தை அனுப்ப டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அனுப்ப அந்நாட்டு அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினினபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை கைவிலங்கிட்டு, காருக்கு அடியில் படுக்கவைத்து, அவரின் கழுத்தின் மேல் போலீஸ்காரர் ஒருவர் முழங்காலை வைத்து அழுத்துவது போன்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவில், சுமார் 8 நிமிடங்கள், முழங்காலால் அழுத்தப்பட்டதால், வலி தாங்காமல், ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஜார்ஜ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து, நகரம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போலீஸ் வாகனங்கள், கடைகள், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல போலீசார் காயமடைந்தனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி தாக்குதல் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில இடங்களில் துப்பாக்கி சுடும் நடைபெற்றது. மினிசோட்டாசொட்டா மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட என மினினபொலிஸ் நகரில் வன்முறையை அடக்க தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 500 வீரர்களை மினிசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே, வன்முறை போராட்டங்கள் அதிகரித்து வருவதால் மினினபொலிஸ் நகருக்கு ராணுவத்தை அனுப்ப பென்டகன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ போலீசை தயார் நிலையில் வைக்கும்படி அதிபர் டிரம்ப், பென்டகனுக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மினினபொலிஸ் நகரில் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. மேயர் ஜேக்கப் ஃப்ரே, நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். அல்லது நான் தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பி சரிசெய்வேன்,' என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை