செலவு செய்வது மகிழ்ச்சியை தருகிறதா?

தினமலர்  தினமலர்
செலவு செய்வது மகிழ்ச்சியை தருகிறதா?

நுகர்வு கலாசாரத்தை சரியாகப் புரிந்து கொண்டால், நம் செலவுகளை கையாள்வதில் சில தெளிவுகள் கிடைக்கும். சந்தை பொருளாதாரம் மக்களின் நுகர்வு பழக்கத்தைச் சார்ந்தது. இதனால் தான் வாடிக்கையாளரின் உளவியல் பற்றிய ஆராய்ச்சிகள் 1950களிலேயே துவங்கிவிட்டன.

மக்கள் தம் அடிப்படைத் தேவைகளை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தால் சந்தை இத்தனை ராட்சஷத்தனமாய் வளர்ந்திருக்க முடியுமா? அதனால், அவர்கள் செய்த ஒரே வேலை, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பெருக்குவது. ஆடம்பரத்தையும் தேவையில்லாததையும் அவசியம் என நம்ப வைப்பது. மாறும் உலகின் ஒவ்வொரு சிறு அசைவிற்கும் ஏற்ப, புதிய புதிய பொருட்களைத் தயாரித்து, சந்தையில் இறக்குவது.

ஊடகங்களின் ஜீவ நாடி
கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம், வாடிக்கையாளர்களை இந்த புதிய பொருட்களை வாங்க வைப்பது. நிறைய பொருட்கள் வாங்க, நிறைய சம்பாதிக்க வேண்டும். நிறைய கடன் வாங்க வேண்டும். உங்களை மூளைச் சலவை செய்ய, உங்கள் வாழ்வியல் மதிப்பீடுகளை மாற்றிக்கொண்டே இருப்பது தான் விற்பனை உலகின் தந்திரம். ‘நீ கறுப்பாய் இருந்தால் கல்யாணம் ஆகாது; சிவப்பாக இந்த களிம்பை பூசு, குழந்தை சிறுநீரில் கை வைத்தால் நோய் வந்து விடும்; தரையில் இந்த கிளீனரைப் பயன்படுத்துங்கள், உங்கள் குழந்தை சாப்பிடும் உணவில் சத்துக் குறைவு உள்ளது; 32 சத்துக்கள் கொண்ட எங்கள் டப்பா வாங்குங்கள், சும்மா இருக்கும் நேரத்தில் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தை நீங்கள் மொபைலில் விளையாடுங்கள்; பைக் வாங்கும் அளவு காசு சேரும்’ இப்படி தொடர்ந்து ஒரு குரல் உங்களை ஏதாவது ஒன்றை செய்யச் சொல்லியபடி இருக்கிறது. ஊடகங்களின் ஜீவ நாடி, விளம்பரங்கள். இந்த விளம்பரங்களால் தான் நீங்கள் செதுக்கப்படுகிறீர்கள். இவை தவிர, விற்பனை உத்திகள் தொடர்ந்து உங்கள் நுகர்தலை அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஒன்று வாங்கினால், ஒன்று இனாம்; 5,000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால், 1,000 ரூபாய்க்கு பொருட்கள் இலவசம்; இன்று மட்டும், 33 சதவீதம் தள்ளுபடி.உற்பத்தி விலைக்கே இன்று மட்டும்; ஒன்று வாங்கினால், 50 ரூபாய், பத்து வாங்கினால் 300 ரூபாய்; அடுத்த முறை வருகையில் பயன்படுத்த பரிசுக் கூப்பன்... இப்படி ஆயிரம் சொல்லலாம்.


பிரபலங்கள் பேட்டி
உங்களை கடைக்குள் கொண்டு வரத் தான் ஆயிரம் உத்திகள். இன்றைய சூப்பர் மார்க்கெட் அல்லது மால் யுகத்தில், போட்ட லிஸ்ட்டை மட்டும் பார்த்து, அதை மட்டும் வாங்கி வருபவர்கள் யாருமே இருக்க முடியாது. வாங்க நினைத்தை விட, நினைக்காததை தான் அதிகம் வாங்கி வருகிறோம். கண்ணில் பார்த்து, பிடித்துப் போய் விட்டால் வாங்க எது தடை?இன்று கையில் பணம் உள்ளதா என்று பெரும்பாலோர் கவனிப்பதில்லை. கையில் கார்டு இருந்தால் போதும். அதனால் தான் மாலில் நடந்து களைப்பாகி, ஒரு காபி ஷாப்பில், 400 ரூபாய்க்கு ஒரு முழங்கை உயர மக்கில், ரொம்ப சுமாரான காபியை குற்றம் சொல்லாமல் குடித்து வருகிறோம். இன்று ஷாப்பிங் செல்லுதல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அல்ல. சிலருக்கு அது போதை; சிலருக்கு அது இளைப்பாறுதல்; சிலருக்கு அது கேளிக்கை; சிலருக்கு அது கற்பனையுலகம்.

துாக்கத்திற்கு ஷாப்பிங் சிறந்த சிகிச்சை என பல பிரபலங்கள் பேட்டி கொடுப்பதில், உண்மை இல்லாமல் இல்லை. இது பெருத்த பணக்காரர்களை, மன அளவில் மட்டும் தான் பாதிக்கும். ஆனால், நடுத்தரவர்க்கத்தை பொருளாதார, சமூக, உளவியல் ரீதியில் படுமோசமாக பாதிக்கிறது. தேவையில்லாத ஒரு பொருள் வாங்குகையில், அதற்கு அவர்கள் தரும் விலை, மிக மிகப் பெரிது. இது தவிர்க்கக்கூடியது என்பது தான் வாதம். இன்றைய நுகர்வு சூழலில், பலதரப்பட்ட வயதுள்ள குடும்பத்தினர் உள்ள அமைப்பில், டிஜிட்டல் யுகத்தில் செலவுகளை குறைப்பது மிக மிகக் கடினமானது. நம் தாத்தா வாழ்க்கையை வாழ்வது இயலாத ஒன்று. ஆனால், இந்த நுகர்வு சூழலை நுட்பமாகப் புரிந்து கொண்டு, சில சிறிய மாற்றங்களை கொண்டு வந்தாலே, செலவுகள் கணிசமாகக் குறையும்.


கிரெடிட் கார்டில் செலவு செய்வதை குறைக்க என்னெவெல்லாம் செய்ய முடியும் என்று பாருங்கள். காய்கறி, பழங்களை சாலையோர சிறு வியாபாரிகளிடம் வாங்குங்கள். எவ்வளவு ஆனாலும் கார்டை தேய்த்து விட்டு வந்தால் போயிற்று என்ற எண்ணம் இல்லாமல், ஒவ்வொரு விலையையும் பார்க்க ஆரம்பிப்பீர்கள்.அதேபோல, ’மால்’ போன்ற இடங்களுக்கு அடிக்கடி செல்வதைக் குறைக்கப் பாருங்கள். அங்கே போன பிறகு செலவு செய்யாமல் இருப்பது நடக்காதது. நான்கு முறை செல்வதற்கு பதில், மூன்று முறை செல்லுங்கள். சினிமா பார்க்க விரும்பினால், மால்களில் இருக்கும் தியேட்டர்களை தவிருங்கள். இலவசம், தள்ளுபடி, பரிசுக் கூப்பன் என எதுவானாலும் முதலில் அதை நிராகரியுங்கள்.

ஆன்லைனில் குழந்தைகள் பொருட்கள் வாங்குவதைக் கண்காணியுங்கள். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் தடை செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது உறவினர் நிலத் தரகராகவோ, சீட்டு நடத்துபவராகவோ, எம்.எல்.எம்., போன்ற தொழிலுக்கு முகவராகவோ இருக்கக் கூடும். இருந்தாலும் கூட அவர்களது தொழில் கோரிக்கைகளை நிர்தாட்சண்யமாக நிராகரியுங்கள். கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை. மகிழ்ச்சிக்கான காரணிகள், மன நிலைகள் பற்றி கடந்த, 10 ஆண்டுகளில் நிறைய உளவியல் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உலகளாவிய ஆய்வு முடிவுகள் ஒரே குரலில் சொல்லும் உண்மை இது தான்:


மகிழ்ச்சி தருவதில்லை
பொருட்களை வாங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைத்து தான் மக்கள் பெரும்பாலும் அவற்றை வாங்குகின்றனர். ஆனால், வாங்கியபின் அதன் மதிப்பையும் உணர்வதில்லை; மன திருப்தியும் அடைவதில்லை. இல்லாத பொருளை நினைத்து பற்றாக்குறை உணர்வு கொள்ளுதலும், அடுத்த நுகர்தலுக்கான திட்டமிடுதலிலும் காலம் செல்கிறது. இது, நெருப்பை நெய் கொண்டு அணைப்பது போல.பொருட்களுக்கு செலவு செய்வது மகிழ்ச்சியைத் தருவதில்லை என்றால், எதுதான் மகிழ்ச்சியைத் தரும்? வாழ்வின் விலை மதிப்பில்லாத தருணங்களும், அவை தரும் அனுபவங்களிலும் தான் என்கின்றனர் உளவியலாளர்கள். தாய் மடியும், தாம்பத்திய சுகமும், பிள்ளையின் செல்லக் கொஞ்சலும் விலை மதிப்பில்லாதவை. விலை தர வேண்டிய அவசியமில்லாதவையும் கூட! – பணம் பெருகும்.செலவு செய்வது மகிழ்ச்சியை தருகிறதா?

டாக்டர். ஆர்.கார்த்திகேயன்

மூலக்கதை