திருப்பூர் மாவட்டத்தில், 200 பஸ்கள் இயக்கப்படும்

தினமலர்  தினமலர்
திருப்பூர் மாவட்டத்தில், 200 பஸ்கள் இயக்கப்படும்

திருப்பூர்:கொரோனா ஊரடங்கு தளர்வில், பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.கொரோனா ஊரடங்கு தளர்வில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சுற்றியுள்ள நான்கு மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு, 50 சதவீத பஸ் இயக்க, மாநில அரசு ஒப்புதல் வழங்கியது.
அரசு வரையறுத்த எட்டு மண்டலங்களில், முதல் மண்டலத்தில் திருப்பூர் இடம் பெற்றுள்ளது. திருப்பூரில் இருந்து கோவை, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல்லுக்கு, பஸ் இயக்கப்பட உள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளதால், மற்றொரு பகுதி (மேற்கு வாயில்) வழியாக இன்று முதல் பஸ் இயக்கப்பட உள்ளது.
இங்கிருந்து அவிநாசி, கோவை, பல்லடம், காங்கயம், கொடுவாய் பகுதிக்கு பஸ் இயக்கப்படும். ஊத்துக்குளி, பெருந்துறை வழியாக, ஈரோடு செல்லும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.இடப்பற்றாக்குறையால், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் செல்லும் பஸ்கள், புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட உள்ளன. 'வீரபாண்டி வழியாக இப்பஸ்கள் வந்து செல்லும்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'ஐம்பது சதவீத வழித்தடங்களில், 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தின் எட்டு கிளைகளில் மொத்தம், 540 பஸ்கள் உள்ளன.இன்று, 200 முதல், 250 பஸ்கள் இயக்கத்துக்கு வருகிறது. இயங்கவுள்ள பஸ்களின் நேரம், அட்டவணை குறித்து விரிவான தகவல் பின்னர் வெளியிடப்படும்,' என்றனர்.
தனியார் நிலை என்ன?
திருப்பூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், 'நகரில், 124 பஸ்களும், மாவட்டம் முழுக்க, 205 பஸ்கள் உள்ளன. இவற்றில், 60 சதவீத பஸ் இயக்கப்படும். அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பஸ் இயக்கம் குறித்து ஆலோசித்து இன்று(நாளை) காலை முடிவெடுக்கப்படும்,' என்றார்.
மினி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், 'வட்டார போக்குவரத்து துறை அலுவலரின் அனுமதியை பொறுத்து, இன்று (நாளை) காலை பஸ் இயக்கம் முடிவு செய்யப்படும்,' என்றார்.

மூலக்கதை