11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை

தினமலர்  தினமலர்
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை

புதுடில்லி: 'மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை' என, டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம் கார்டு' வழங்கி வருகின்றன. இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.


மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.

இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், 'லேண்ட் லைன்' தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம். இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.

லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என, டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை