'நாசா' விண்வெளி வீரர்களுடன் ராக்கெட்

தினமலர்  தினமலர்
நாசா விண்வெளி வீரர்களுடன் ராக்கெட்

வாஷிங்டன் : அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இரண்டு, 'நாசா' விண்வெளி வீரர்களுடன், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட், நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, 'க்ரூ டிராகன்' விண்கலத்தை ஏந்திச் செல்லக் கூடிய, 'பால்கன் 9' ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. கடந்த வாரம் விண்ணில் செலுத்த திட்டமிடப் பட்டிருந்த நிலையில், மழை காரணமாக இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, இந்திய நேரப்படி, நேற்று நள்ளிரவு, 12:52 மணிக்கு, 'பால்கன் 9' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்ட க்ரூ டிராகன் விண்கலத்தில், பாப் பென்கென், 49, மற்றும் டக் ஹர்லி, 53, என, இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ௧௯ மணி நேர பயணத்துக்கு பின், இந்த விண்கலம், ஏற்கனவே விண்வெளியில் நிலைகொண்டிருக்கும், சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நிருபர்களிடம் கூறியதாவது:நாசா, பொது மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களால் நான் பெருமைப்படுகிறேன். இது, நம் நாட்டிற்கே பெருமையான தருணமாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, இலான் மஸ்கிடம் பேசினேன். அவருக்கு என் பாராட்டுகளை தெரிவித்தேன்.

ராக்கெட் ஏவப்படுவதற்கு முன், இரண்டு விண்வெளி வீரர்களுக்கும், என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.இவ்வாறு, அவர் கூறினார்.பின், இலான் மஸ்க் கூறுகையில், ''எனக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இது, கனவு நனவான தருணம். ஸ்பேஸ் எக்ஸ், நாசா மற்றும் இதர கூட்டாளிகள் அனைவரின் கடும் முயற்சியால், இது சாத்தியமானது,'' என்றார்.கடந்த, ௨௦௧௧க்குப் பின், அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவது, இதுவே முதல்முறை.அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன அரசுகள் மட்டுமே, இதை சாத்தியமாக்கிய நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது பெற்றுள்ளது.

மூலக்கதை