பணியிழப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு வர

தினமலர்  தினமலர்
பணியிழப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு வர

கொரோனா, ‘லாக்டவுன்’ பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருப்பதால், நிலைமையை சமாளிக்க வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக, பணியிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த சூழலில், திடீரென வேலையையும் இழக்க நேர்வது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


வேலை இழந்தவர்கள், தங்கள் நிதி நிர்வாகத்தில் அடிப்படையான மாற்றங்களை செய்வதன் மூலம், பாதிப்பில் இருந்து மீண்டு வரலாம்.


குறைந்த வட்டி கடன்கள்: வேலையிழந்த சூழலில், கடன்களை நிர்வகிப்பது தான் பெரும் சவாலாக இருக்கும். ஆனால், மாதத்தவணையை செலுத்த முடியும் என்றால், வீட்டுக்கடன் போன்ற குறைந்த வட்டி கடனை அடைப்பது பற்றி கவலை கொள்ள வேண்டாம். இந்த வட்டி, வருமான வரிச்சலுகைக்கு பொருந்தும். மாதத்தவணைக்கு வழி செய்தால் போதும்.

அதிக வட்டி கடன்: குறைந்த வட்டி கடனை முன்கூட்டியே அடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், கிரெடிட் கார்டு உள்ளிட்ட அதிக வட்டி கடனை பைசல் செய்யும் வழியை பார்க்க வேண்டும். இதற்கான தவணை தள்ளி வைப்பை நாடுவது, கடன் சுமையை அதிகமாக்கும். எப்படியாவது, இந்த கடன்களை அடைக்கும் வழியை தேட வேண்டும்.


நகை கடன்: நிலைமையை சமாளிக்க புதிதாக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடனுக்கான கோரிக்கை சமர்பிப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். தவிர்க்க இயலாத சூழலில், தங்க நகை கடன் வசதியை நாடலாம். தனிநபர் கடனை விட இது மலிவானது. நிலைமை சீரானதும் நகையை மீட்டுவிடலாம்.


தொடர் முதலீடு: கடனை சமாளிப்பதில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் முதலீடுகளை மறந்துவிடக்கூடாது. நெருக்கடியான சூழலில், முதலீடுகளை நிறுத்திவிடுவது ஏற்றதாக தோன்றும். ஆனால் முதலீடுகள் நீண்ட கால நோக்கிலானவை. அவற்றை தொடர்வதற்கான வழியை ஆராய வேண்டும். ‘ரிஸ்கான’ முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

ரொக்க பாதுகாப்பு: புதிய வேலை கிடைக்கும் வரை, செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம். கையில் இருக்கும் ரொக்கத்தை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். லாக்டவுன் காலத்தில் செலவுகள் குறைந்திருக்கும். அந்த சேமிப்பை அடிப்படையாக கொண்டு, தொடர்ந்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

மூலக்கதை