அட... 'முட்டை'தான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்!

தினமலர்  தினமலர்
அட... முட்டைதான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்!

இந்தியா போன்ற விவசாய நாட்டில், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துவது மிகவும் முக்கியம். விவசாயிகள் பகுதி அல்லது முழு நேரமாகவோ செய்யக்கூடிய ஒரு தொழில் கோழி வளர்ப்பு. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் அதிகம்.

தமிழகம், இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. 1970ம் ஆண்டுகளில், சிறிய அளவில் தமிழகத்தில் துவங்கிய கோழிப்பண்ணை தொழில், தற்போது, பல ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகளுடன், தினமும், 3 கோடி முட்டை தயாரிக்கும் அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்த தொழிலில் ஈடுபடுவதால், கிராமப்புற சிறு விவசாயிகள், தங்களின் வருமானத்தை நாலு மடங்காக உயர்த்தலாம்.

சாதித்து காட்டிய 'ஸ்டார்ட் அப்'
கோழி வளர்ப்பு தொழிலில் சாதித்து காட்டியிருக்கிறது, பீகாரை சேர்ந்த 'எக்காஸ்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம். வட இந்தியாவில், பல மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், சிறு விவசாயிகளின் வருமானத்தை கூட்டும் விதமாகவும், ஐ.ஐ.டி., படித்த மாணவர்களால் இந்நிறுவனம் துவக்கப்பட்டது. உற்பத்தி செய்யும் முட்டைகளை, 'எக்காஸ்' நிறுவனமே வாங்கிக் கொள்கிறது. பண்ணைக்கு தேவையான பண்ணை மேனேஜ்மெண்ட் செயலி (App), பண்ணையின் சுற்றுப்புற சுழ்நிலைகளை கண்காணிக்க IoT (Internet of Things) சென்சார்கள், விலை குறைந்த பண்ணை நிர்வாக உபகரணங்கள் ஆகியவற்றை, இந்த கம்பெனியே விவசாயிகளுக்கு வழங்குகிறது. இணைய தளம்: https://eggoz.in/
'எக்' பிராண்டிங்
தமிழகம், கோழி பண்ணை தொழிலில் பெரியளவில் முன்னேறி இருந்தாலும், முட்டைகளை பிராண்ட் செய்து விற்பனை செய்வதில், பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது ஒரு வருத்தமான விஷயமே. பிராண்ட் செய்து விற்கும் போதும், ஆர்கானிக் முட்டைகளை விற்கும் போதும், விலை சிறிது கூடுதலாக கிடைப்பது உண்மை. 
'ஆர்கானிக் எக்ஸ்' 
ஆர்கானிக் எக்ஸ் (Organic Eggs) - இவைகளும் சுதந்திரமாக பெரிய அளவில் இருக்கும் பண்ணைகளில் வளரும் பறவைகள் வாயிலாக கிடைக்கும் முட்டைகள் தாம். ஆனால், இந்த பறவைகளுக்கு கொடுக்கப்படும் உணவு, ஆர்கானிக் உணவுகளாக இருக்கும். இவைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுப்பதில்லை.நம் முன்னோர்கள், பெரிய வீடுகளில் சுதந்திரமாக வளர்த்த கோழிகளை நியாபகப்படுத்துகிறதா? ஆமாம், அதுதான் உண்மை. அந்த பழக்க வழக்கங்களில் பல தான், இன்று ஆர்கானிக் என்ற முறையில் மறு அவதாரம் எடுத்திருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் உள்ள நுகர்வோர், இறைச்சி சாப்பிடுவதை அதிக அளவில் குறைத்து வருகின்றனர். இதற்கு முக்கியமாக, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு நலன் தொடர்பான காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.மாமிச உணவுக்கு மாற்றாக இருக்கும் உணவுப்பொருட்கள் தொழில், உலகளவில் பெருகி வருகிறது. இத்தொழில், 2030ம் ஆண்டில், 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை தாண்டியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பத்தாண்டுகளில், இந்த துறையின் ஆண்டு வளர்ச்சி விகிதம், 40 சதவீதத்துக்கு மேல் கண்டிப்பாக இருக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
சந்தேககங்களுக்கு: [email protected],
www.start up buisnessnews.com. 
மொபைல் எண்: 98204-51259.

மூலக்கதை