பல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அரியானாவில் அலட்சியம்

தினகரன்  தினகரன்
பல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அரியானாவில் அலட்சியம்

அரியானா: அரியானாவில் உள்ள அரசின் திறந்தவெளி கிடங்கில் பல ஆயிரம் டன் கோதுமை மூட்டைகள் வீணாகி உபயோகப்படுத்த முடியாத நிலையில் கிடக்கின்றன. ஊரடங்கு காரணமாக பல வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் போதிய உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல லட்சம் பேர் பசி, பட்டினியால் பரிதவித்து வருகின்றனர். ஆனால், அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நகுராவில் அரசு தானிய கிடங்கில் திறந்த நிலையில் கோதுமை மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவை மழை மற்றும் வெயிலினால் சேதமடைந்துள்ளது. இது குறித்த விசாரணையில் பழைய இருப்புகள் திறந்த வெளி கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2019 மற்றும் 2020ம் ஆண்டில் 1930 டன் தானியம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்திய உணவு நிறுவனங்களில் 132 லட்சம் டன் வரை உணவு தானியங்கள் வீணாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், இவை எழுத்தில் மட்டுமே இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர்.

மூலக்கதை