இன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ வேலையை தேடுவதே தலையாய வேலை

தினகரன்  தினகரன்
இன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ வேலையை தேடுவதே தலையாய வேலை

* வீட்டில் இருந்தே பார்க்கக்கூடிய வேலை வாய்ப்புகள் தொடர்பான தேடல் ஏறக்குறைய 4 மடங்கு அதிகரித்துள்ளதுபுதுடெல்லி: கொரோனாவால் உயிர் போய்விடுமோ என்பது ஒருபுறம் இருக்க, வேலையும் போய்விடுமோ என்ற அச்சம் பலரை தொற்றிக்கொண்டுள்ளது. ஊரடங்கால் நசிந்து போன துறைகளில் பணியாற்றிய பலர் வேலை இழந்துள்ளனர். குடும்ப வருமானம் வெகுவாக குறைந்து விட்டது. பல்வேறு அத்தியாவசிய துறைகள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்தே வேலை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், கொரோனாவால் எதிர்காலத்தில் ‘வீட்டில் இருந்தே வேலை’ திட்டம் புதிய வழக்கமாகவே ஆகிவிட வாய்ப்புகள் உள்ளன என, கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில், சமூக இடைவெளியுடன் பணியாற்றுவதை கருத்தில் கொண்டும், எதிர்கால மாற்றத்துக்கு ஆயத்தம் ஆகும் வகையிலும், வீட்டில் இருந்தே பார்க்கக்கூடிய வேலை தொடர்பாக மக்கள் இன்டர்நெட்டில் தேடத் துவங்கியுள்ளனர்.  கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை இன்டர்நெட்டில் வேலை தேடல்கள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், ஆபீசுக்கு போகாமல் வீட்டில் இருந்தே பார்க்கக்கூடிய வேலை வாய்ப்புகள் தொடர்பான தேடல் ஏறக்குறைய 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 377 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் ‘ரிமோட்’ ஒர்க் என்ற தேடல் 261 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்தே வேலை நியமனங்களும் 168 சதவீதம் உயர்ந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா மக்கள் மன நிலையிலும், பணியிடங்களிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியதை இது மெய்ப்பிப்பதாக, ஆய்வு நடத்தியோர் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை