28 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை: மருத்துவ ஆய்வு அறிக்கையில் தகவல்

தினமலர்  தினமலர்
28 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை: மருத்துவ ஆய்வு அறிக்கையில் தகவல்

புதுடில்லி,:'ஜனவரி 22 முதல் ஏப்ரல் 30 வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 184 பேரில் 28 சதவீதத்தினருக்கு தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை' என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

பரவும் அபாயம்


கொரோனா பாதிப்புகள் குறித்து ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவுகள் இந்திய மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுஉள்ளன.
அதன் விபரம்:
கடந்த மார்ச் மாத துவக்கத்தில் நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் ற்கொள்ளப்பட்டன. இது ஏப்ரல் இறுதியில் 50 ஆயிரமாக உயர்ந்தது. ஜனவரி 22 முதல் ஏப்ரல் 30 வரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 518 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 40 ஆயிரத்து 184 பேருக்கு தொற்று உறுதியானது.இதில் 28 சதவீதம் பேருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதில் 25 சதவீதம் பேர் தீவிர தொற்றுடன் கண்டறியப்பட்டனர். இது மிகவும் ஆபத்தானது. லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது அறிகுறிகள் இல்லாதவர்களிடம் இருந்து அதிக அளவில் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

பாதிப்பு



மருத்துவ பணியாளர்கள் 5.2 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியாக 50 முதல் 69 வயது வரம்பில் உள்ளவர்கள் 63.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர். பத்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் 6.1 சதவீதம் பேர் உள்ளனர்.கொரோனா தொற்று ஆண்களை அதிகம் பாதித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் ஆண்கள்; 24.3 சதவீதம் பேர் பெண்கள்.நாட்டில் மொத்தமுள்ள 736 மாவட்டங்களில் 523 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம், டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை