'காட்மேன்' தொடருக்கு தடை வேண்டும்!

தினமலர்  தினமலர்
காட்மேன் தொடருக்கு தடை வேண்டும்!

சமூகத்துக்கு பேரழிவு!



தேவராஜ், தலைவர் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை:திரைப்படத்தில், காட்சிகளை தணிக்கை செய்ய சென்சார் போர்டு இருப்பது போல், இணையதளம், தொலைக்காட்சி தொடர்களுக்கு இல்லை. இவற்றில் இடம்பெறும் காட்சிகளையும், தணிக்கை செய்ய குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு இல்லாத நிலையில், தொலைக்காட்சி தொடர்களில் அனைத்தும் அரங்கேறுகின்றன. பிராமணர்களை அவமதிப்பது பாவச் செயல். பூஜை, வழிபாடு என்று இருப்பவர்களை சீண்டுவது தவறு. இவர்கள் குறித்து தேவையற்ற விமர்சனங்கள் எழுப்புவது கண்டிக்கத்தக்கது.
தற்போது இந்த, 'காட்மேன்' தொடரை ஒளிபரப்ப அனுமதித்தால், இன்னும் பல அசிங்கங்கள், தொலைக்காட்சி தொடர்களில் அரங்கேறும் வாய்ப்புள்ளது. இது சமூகத்துக்கு பேரழிவாகும்.


நாட்டின் அமைதி குலையும்!



வேல்ராஜ், நிறுவன தலைவர், அழகு முத்துக்கோன் பேரவை:இத்தொடரை ஒளிபரப்பினால், கண்டிப்பாக சமூக சீரழிவு ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் நிலை உருவாகும். பிராமண சமூகத்தை அவமதிக்க நினைத்து, இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொடர் எடுத்தவர்கள் மற்றும் டீசர் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதை அனுமதித்தால், பின், நாட்டில் உள்ள அனைத்து, சமுதாயத்தையும் இழிவுபடுத்தி, தொடர்கள் வெளியாகும்.இவ்வாறான ஒரு நிலை ஏற்படும்போது, நாட்டின் அமைதி குலையும். நாம் கட்டிக்காத்து வரும் பாரம்பரியம், கலாசாரம் என, எதுவும் நிலைக்காது. இத்தொடரை தடை செய்ய வேண்டும்.

ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது!



கிருஷ்ணசாமி, தலைவர், தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற கழகம்:நாட்டில் அனைவரும் மதம், இனம் என்ற பாகுபாடின்றி, சகோதரத்துவத்துடனும், ஜனநாயகத்துடனும் வாழ்ந்து வரும் போது, இதுபோன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது. இந்த, 'காட்மேன்' தொடர் பிராமணர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.இதை அனுமதித்தால், சமூகத்துக்கு பேராபத்து ஏற்படும். ஏற்கனவே, தனியார் தொலைக்காட்சிகள், இணையதளத்தில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்களில், சமூக சீரழிவுகள் தலை விரித்தாடும்போது, இந்த தொடர், சமூக சீரழிவை எல்லை மீறி கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.

மேன்மையை சிதைக்காதீர்!



ஸ்ரீமான் சுந்தரம், மாநில கொள்கைப் பரப்பு செயலாளர், தமிழ்நாடு கம்மவார் நாயுடு எழுச்சி பேரவை:இணைய தொடர் டீசரில், குறிப்பிட்ட சமூகத்தை காயப்படுத்தும் விதமாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பதிவிடுவது தவறானது. இதுபோன்ற படங்கள் வந்தால் பாரம்பரியமாக இருக்கும் சமுதாயத்தின் மேன்மை கெட்டு விடும்.குழந்தைகள் இதைப்பார்க்கும்போது நம் பாரம்பரியத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடும். பாரம்பரிய மேன்மை சிதைக்க கூடும். இது இளைய தலைமுறையினரிடம் தவறான கருத்துக்களை கொண்டு போய் சேர்த்து விடும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதி, மதத்தை இழிவு செய்யாதீர்!



சந்திரசேகரன், தலைவர், கோவை நாடார் சங்கம்:நம் நாடு, சமுதாயம் மதசார்பற்ற, ஜனநாயக கொள்கைகளை கொண்டது. யாரோ ஒருத்தரை முன்னிலைப்படுத்துவதற்காகவும், உயர்த்தி பேசுவதற்காகவும் இன்னொரு சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசுவது என்பது தவறானது. இது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.அவர்களது கருத்தை வலியுறுத்த வேண்டும் எனில் மற்றவர்களை பாதிக்காத வகையில் தெரிவிக்க வேண்டும். அதற்காக குறிப்பிட்ட சமுதாயத்தை, ஜாதி, மதத்தை இழிவாக பேசுவதை
ஏற்றுக் கொள்ள முடியாது.

வன்மையாக கண்டிக்கத்தக்கது!



சுந்தரம், தலைவர், கோவை மாவட்ட தேவர் பேரவை:எதிர்மறையான கருத்துக்களை மையப்படுத்தி திரைப்படங்கள், சீரியல்கள் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது. ஏதாவது ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரிப்பது என்பது நல்ல விஷயம் அல்ல. அவரவர் சமுதாய கோட்டுபாடுகளின்படி நடந்து கொள்ள வேண்டும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில்
எவ்வித சந்தேகமும் கிடையாது.

மன்னிப்பு கோர வேண்டும்!



செல்வராஜ், மாநிலத் தலைவர், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்:திரைப்படங்களுக்கு தணிக்கை துறை இருப்பது போல், சின்னத்திரை, 'ஆன்லைன்' திரைப்படங்களை வெளியிடுவதற்கும் தணிக்கை துறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு கேளிக்கை வரி விதிப்பது போல், வெப் சீரியல்கள் பார்ப்பவர்களுக்கும் கேளிக்கை வரி விதிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். திரைப்படங்களை விட ஆபாச காட்சிகள், வசனங்கள் அதிகமாக இதுபோன்ற ஆன்லைன் படங்களில் வருகின்றன. இதை வேரோடு களைய வேண்டும். சர்ச்சைக்குரிய ஆன்லைன் சீரியல் காட்சிகளை நீக்க வேண்டும். அதற்காக அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்.

தொடரை தடை செய்யணும்!



பாலகிருஷ்ணன், தலைவர், அந்தணர் முன்னேற்ற கழகம், பொள்ளாச்சி:'காட்மேன்' வெப் தொடரில், பிராமண சமுதாயம் பற்றியும், இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிராமண சமுதாயத்தையே எப்போதும் தாக்கி படம், தொடர் எடுப்பதை சிலர் உள்நோக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாறு செயல்படுவோர், படம் எடுக்க துாண்டுபவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில், சமூக நல்லிணக்கத்தை
சீர்குலைக்கும் வகையில், இதுபோன்று தொடர் வெளியிட தடை செய்ய வேண்டும்; படம் எடுப்பவர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுப்பாடுகளை உருவாக்கணும்!



திருவேங்கடகுமார், 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கத்தின் முன்னாள் செயலாளர்; செயற்குழு உறுப்பினர், பொள்ளாச்சி:ஜாதி, மதம் குறித்து அவதுாறாக படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுப்பதால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில், அனைத்து மதம், ஜாதியினர் சகோதர, சகோதரிகளாக உள்ளனர். இந்நிலையில், பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படங்கள் எடுப்பதை தவிர்த்து, நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
திரைப்படம், வெப் தொடர் போன்றவைக்கு அரசு உரிய கட்டுப்பாடுகளை உருவாக்கி, வருங்காலங்களில் இது போன்று நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'காட்மேன்' பார்த்ததில் பேரதிர்ச்சி'



எஸ்.வி.சேகர், நடிகர், சென்னை: பிராமண சமூகத்தை கேவலமாக சித்தரிக்கும், 'காட்மேன்' டீசர் பார்த்ததில் பேரதிர்ச்சி ஆனேன். இந்த வெப் சீரிஸ், ஜூன், 12 முதல் ஜி - ௫ இணைய தளத்தில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்திருந்தனர். இதில் சாமியார் வேடமிட்ட ஒருவர், 'என்னை சுற்றியிருக்கும் எல்லா பிராமணனும் அயோக்கியனா தான் இருக்காங்க...' என வசனம் பேசியுள்ளார்.இது மத ரீதியாக பிரிவினை, பகையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் பொது அமைதி சீர்கெடும். தமிழகத்தில் பெரியளவில் வன்முறை வெடிக்கும். இதன் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என, அனைவரையும் கைது செய்ய வேண்டும். படம், டீசர் ஒளிபரப்பை தடை விதிக்க வேண்டும்.

'பிரிவினை ஏற்படுத்தும்'



எஸ்.அகமது நவவி, மாநில செயலர், எஸ்.டி.பி.ஐ., மதுரை : திரைப்படம், 'டிவி' தொடர்களுக்கு என்ன தான் கருத்து சுதந்திரம் இருந்தாலும், யார் மனதையும் புண்படுத்தக்க கூடாது. பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக ஆபாச காட்சிகளுடன் படமாக்கப்பட்ட, 'காட்மேன் வெப் சீரிஸ்' டீசர், படத்தை கண்டிக்கிறோம்.ஜாதி, மதம் பேதமின்றி ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டும் மக்களால், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இது போன்ற படங்கள் வெளியானால் மக்களிடம் பிரிவினை ஏற்படும். எந்த சமூகத்தையும் இழிவுபடுத்துவதை ஏற்க மாட்டோம். இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

'மனரீதியாக கஷ்டப்படுத்தும் நிலை'



பெர்னான்டஸ் ரத்தினராஜா, தென்னிந்திய திருச்சபை பொது செயலாளர், மதுரை: இந்தியா மத சார்பற்ற நாடு. மதத்தின், ஜாதியின் அடிப்படையில் ஒருவரையொருவர் புண்படுத்தும் நிகழ்வுகள் நடக்க கூடாது. மனிதருக்குள் மதத்தினாலும், ஜாதியினாலும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. இந்திய மக்கள் அனைவரும் ஜாதி, மத ரீதியாக பிளவுபடாமல் சகோதரர்களாக வாழ வேண்டும். 'காட்மேன் வெப்சீரிஸை' பொறுத்தவரை ஒரு மதத்தினரையோ, ஒரு ஜாதியினரையோ மனரீதியாக கஷ்டப்படுத்தும் சூழ்நிலை வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும்.

'விஷ விதை துாவினால்விரட்டி அடிப்போம்'



முருகன்ஜி, ஒருங்கிணைப்பாளர், தேவர் தேச பக்த முன்னணி, உசிலம்பட்டி: இச்சர்ச்சையில் மெகா பின்னணி உள்ளது. இந்தியாவின் அடிநாதம் ஹிந்து மதம். இன்று ஹிந்து மதத்திற்கு எதிராக மதம் சார்ந்த பல்வேறு பதிவுகள் இணையங்களில் சுதந்திரமாக வெளியாகின்றன. நாத்திகம் என்ற பெயரில் தேசபக்தியை இழிவுபடுத்தும் செயல்பாடுகள் அதிகரித்துவிட்டன.
ஊரடங்கு காலத்தில் ராமாயணம், மஹாபாரதத்தை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். அவை ஹிந்து மதத்தின் மீதான நம்பிக்கையாகும். இதை சிதைக்கும் வகையில், ஹிந்து மதத்தையும், அதற்காக அர்ப்பணிப்பு அளித்த பிராமணர்களையும் கொச்சைபடுத்தும் விதமாக, காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷ விதைகளை துாவியவர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஹிந்து மதத்திற்கும், பிராமணர்களுக்கும் ஒன்று என்றால் தேசியம், தெய்வீகத்தை மதிக்கும் தேவர் வழியில் வந்த நாங்கள், சும்மா இருக்க மாட்டோம். இதுபோன்ற விஷ விதைகளை விதைக்க துாண்டிவிடுவோருக்கு ஆதரவாக இருக்கும் காங்., தி.மு.க., போன்ற கட்சிகளை எச்சரிக்கிறோம்.

'அனைத்து சமுதாயமும் போராடுவோம்!'


பெரீஸ் மகேந்திரவேல், நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர், மதுரை : ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களே கேலி செய்வது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவதற்கு சமம். தங்களை பிரபலப்படுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. இவர்கள் போன்றவர்களை ஒட்டுமொத்த சமுதாயமும் புறக்கணிக்க வேண்டும். 'காட்மேன்' பட குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும். பிராமணர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையேல், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுதிரண்டு போராட வேண்டியிருக்கும். அனைத்து இன மக்களும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், ஒவ்வொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்துவது தொடர் கதையாக நடக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

'ஹிந்து மதத்திற்கு எதிரான போக்கு'



சந்திரசேகரன், வி.எச்.பி., மாவட்ட தலைவர், மதுரை: பெரும்பான்மையான ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில், அதிகம் விமர்சனத்திற்குள்ளாவதாக ஹிந்து மதம் என்பது வேதனையளிக்கிறது. ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் தான் இதற்கு காரணம். ஹிந்து மதம், பிராமணர்களுக்கு எதிராக தற்போது வெளியாகியுள்ள, 'காட்மேன் ஆன்லைன்' தொடரை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும். இதை தயாரித்த, இயக்கிய, நடித்தவர்கள் மீது, உடனடியாக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இதுபோன்ற தொடர்கள் வெளிவராது.

'மோதல்களை ஏற்படுத்த சதி'



ரமேஷ், அறிவுசுடர் அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை மாநில தலைவர், மதுரை: உலகளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதற்கு வேற்றுமையில் ஒற்றுமையே பிரதானம். பல்வேறு ஜாதி, மொழி, இன, சமூகத்தினர் வாழும் நாட்டில், இதுபோன்ற தொடர்கள் மோதல்களை ஏற்படுத்தும். சகோதரர்களாக வாழ்வோரிடம் பிரிவினைக்கு வழிவகுக்கும். பிராமணர் சமூகத்திற்கு எதிராக இத்தகைய விமர்சனங்களுக்கு தமிழகத்தில்
திராவிட இயக்கங்களே துாண்டுதலாக உள்ளன. தற்போது இப்போக்கு நாடு தழுவிய அளவில் நீடிப்பது வேதனையளிக்கிறது. இத்தொடர் எடுக்கப்பட்டதில் சதி இருக்கிறதா என, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் சினிமா, 'டிவி' தொடர் தயாரிப்போர்
மீது கடுமையான நடவடிக்கைளை எடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இவை தொடராது.

ஆன்லைனில் புகார் செய்யலாம்



தினமும் பார்க்கும் திரைப்படங்களை முறைப்படுத்த, சென்ட்ரல் போர்ட் ஆப் பிலிம் சர்டிபிகேஷன் என்ற, சி.பி.எப்.சி., இருப்பது போல, 'டிவி' தொடர்கள், மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், குழந்தைகளை, பெண்களை, இனத்தை, ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் ஒரு காட்சி, நிகழ்ச்சி வந்தால் https://www.ibfindia.com/complaint - form என்ற, 'லிங்க்' வாயிலாக 'ஆன்லைனில்' புகார் செய்யலாம்.
புகார் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 'டிவி' உரிமத்தை தடை செய்ய கூட அரசிற்கு அதிகாரம் உண்டு.

வழக்கு பதிவு செய்ய வேண்டும்!



முருகன், அருந்ததியர் முன்னேற்ற கூட்டமைப்பு:இப்போது மட்டுமல்ல. பல ஆண்டுகளாகவே இந்து மதத்தை கேவலப்படுத்தும் ஒரு கூட்டம், இந்தியா முழுவதும் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதிகளவில் உள்ளனர். பிற மதம் குறித்து எதுவும் பேசாமல், இந்து மதத்தை குறி வைத்து தாக்கும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மத கடவுள்கள் மீது அளவற்ற பக்தி கொண்டுள்ள, பல கோடி இந்துக்களுக்கு, 'காட்மேன்' போன்ற தொடர்கள் கண்டிப்பாக மன உளைச்சலை தரும். கடந்த சில ஆண்டுகளாக, இதுபோன்ற கருத்து தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, ஆரம்பத்திலேயே இதை முறியடிக்கும் விதமாக, இந்த தொடருக்கு உடனே தடை விதிக்க வேண்டும். மோசமான கருத்துகளை, அமைதியான மக்கள் மத்தியில் பரப்பும் உள்நோக்கம் கொண்ட, 'காட்மேன்' வெப் சீரீஸ் தயாரிப்பாளர், இயக்குனர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

மூலக்கதை