ஹாங்காங் பிரச்னையில் ஐ.நா.வில் காரசார விவாதம்

தினமலர்  தினமலர்

நியூயார்க் : ஹாங்காங்கில், புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் சீனாவின் நடவடிக்கையை எதிர்த்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று விவாதிக்கப்பட்டது.

அப்போது, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை, சீனாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆசிய நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், தன்னாட்சி கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், அதை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, சீனா முயன்று வருகின்றது.ஹாங்காங்கில், தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஹாங்காங்கில் அறிமுகம் செய்ய, சீன பார்லிமென்ட், சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

'இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்' என, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வலியுறுத்தின. அதன்படி, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், இந்தக் கூட்டம் நேற்று நடந்தது.அப்போது, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், கெல்லி கிராப்ட், 'ஹாங்காங் மக்களின் மனித உரிமைகள், சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சர்வதேச விதிகளை, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசு மீறுவதை பார்த்து கண் மூடி இருக்க முடியுமா' என, கேள்வி எழுப்பினார்.அவருக்கு ஆதரவாக, பிரிட்டனும் பேசியது.இதற்கு, சீன துாதர், ஜாங்க் ஜுன் கூறியதாவது:பாதுகாப்பு கவுன்சிலின் நேரத்தை, அமெரிக்கா, பிரிட்டன் வீணடித்துள்ளன.

ஹாங்காங், எங்களுடைய உள்நாட்டுப் பிரச்னை. அதில் தலையிட, இந்த அமைப்புக்கு அதிகாரமில்லை. 'பிரெக்சிட்' எனப்படும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால், சர்வதேச பொருளாதாரம், வர்த்தகத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்கலாம். அல்லது, அமெரிக்காவின் மின்னபொலிசில், ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞரை, போலீஸ்காரர் ஒருவர் கொன்றது குறித்தும், அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் நடந்த அத்துமீறல்கள் குறித்தும் விவாதிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார். சீனாவுக்கு, ரஷ்ய துாதர் ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை