'ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: இந்தியாவின் வெற்றி உறுதி'

தினமலர்  தினமலர்
ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: இந்தியாவின் வெற்றி உறுதி

நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஐந்து தற்காலிக பதவிகளுக்கான தேர்தல், ஜூன் மாதம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம், ஐ.நா., பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது.

அதில், கொரோனா பரவல் காரணமாக, பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து தற்காலிக உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய, ரகசிய ஓட்டெடுப்பு நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டது.
தேர்தல், ஜூன், 17ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் தேதிக்கு, 10 நாட்களுக்கு முன், 193 உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா., பொதுச் சபை தலைவர் திஜானி முகமது பன்டே, கடிதம் அனுப்புவார்.
அதில், தேர்தல் நடைபெறும் இடம், தேதி, ஓட்டு போட ஒதுக்கப்பட்ட நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஓட்டளிக்கலாம். அதன் பின் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள்
அறிவிக்கப்படும்.இத்தேர்தலில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஒரே பிரதிநிதியாக, இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட, 55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே, தேர்தல் தள்ளிப் போனாலும், இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இடம் பெறுவது உறுதி.

மூலக்கதை