கொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை

தினகரன்  தினகரன்
கொரோனா தாக்கம், 5ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி \'மன் கி பாத்\' நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில்,படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிய உள்ள நிலையில், ஜூன் 1 முதல் முழு விலக்கு அளிக்கப்படுமா அல்லது 5ம் கட்டமாக ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது. இது பற்றி மாநில முதல்வர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதில், பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை 2 வாரத்துக்கு நீட்டிக்கும்படி வலியுறுத்தினர். இந்நிலையில், Unlock 1.0 என்று தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி \'மன் கி பாத்\' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மற்றும் 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஊரடங்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும், கட்டுப்பாடுகள் தளர்வு எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உரையாற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஊரடங்கின்போது, தன்னார்வலர்களை கவூரவிக்கும் விதமாக பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரதமராக மோடி பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலக்கதை