டிரம்பின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காதது ஏன்? பேஸ்புக் நிறுவனர் விளக்கம்

தினமலர்  தினமலர்
டிரம்பின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்காதது ஏன்? பேஸ்புக் நிறுவனர் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த மே 25ம் தேதி வெள்ளை இன காவலர் டெரக் சாவ்லினால் விதிமீறல் குற்றச்சாட்டுக்காக, கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் புளாயிட் என்ற நபர் கொல்லப்பட்டார். இதனையடுத்து மின்னசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர்கள் கலந்துகொண்டு, கடும் மக்கள் போராட்டம் வெடித்தது. அமெரிக்காவில் இன்னும் இனப்பாகுபாடு நீடிப்பதாகவும் கருப்பின மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. டிரம்ப் அரசு, பணி இடை நீக்கம் செய்யப்பட்ட வெள்ளை இன காவலர் டெரக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் பக்கங்களில் தனது சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவு செய்தார். அதில், ‛போராட்டக்காரர்கள் என்ற பெயரில் சில வன்முறையாளர்கள் தொடர்ந்து மினேசோட்டா மாகாணத்தில் கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவலர் டெரக் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்த மாகாண கவர்னரை வலியுறுத்தி உள்ளேன். ஆனால் போராட்டத்தை சாக்காக வைத்து கடைகளை சூறையாட போராட்டக்காரர்கள் முற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி இருக்கும்,' என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவு இடப்பட்ட 2 மணி நேரத்திலேயே வன்முறையை தூண்டும் பதிவு என அறிவித்து டுவிட்டர் அதனை நீக்கியது. ஆனால் 18 மணி நேரம் ஆகியும் பேஸ்புக் அந்த பதிவை நீக்காததால் அதன் நிறுவனர் சக்கர்பெர்க் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு சக்கர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபரின் பதிவை நாங்கள் வன்முறையை தூண்டும் பதிவாகப் பார்க்கவில்லை. மாறாக மக்களுக்கு மின்னெசோட்டா மாநில அரசின் நடவடிக்கையை எடுத்துரைக்கும் பதிவாகவே பார்க்கிறோம். இது பேஸ்புக்கின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பதிவு என நான் கருதியதால் அதனை நீக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை