உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து

தினமலர்  தினமலர்
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து

வெலிங்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 17.93 லட்சத்தை தாண்டியுள்ளது; உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 4,542 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவலால், அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துள்ளனர். இங்கு, கடந்த மாதத்தில், 14.7 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், இம்மாதம், 20 சதவீதத்தை நெருங்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், 50 லட்சம் மக்கள் தொகை உள்ள நியூசிலாந்தில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1,504 ஆக உள்ளது.இதில், 1,481 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகிறார்; 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இங்கு வைரசால் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.

ரஷ்யாவில், கொரோனா வைரசால், புதிதாக, 8,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3 லட்சத்து, 87 ஆயிரத்து, 623 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 4,374 ஆக உயர்ந்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் புதிதாக, 2,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 57 பேர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 64 ஆயிரத்து, 028 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 1,317 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 5 லட்சத்து, 20 ஆயிரத்து, 17 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 588 ஆக உள்ளது. இதில், 11 ஆயிரத்து, 069 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்; 921 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் மணிலாவில் ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்த, அதிபர் ரோட்ரிகோ முடிவு செய்துள்ளார். இந்த நடவடிக்கை, வைரஸ் பரவலை மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது.

மூலக்கதை