மலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்

தினமலர்  தினமலர்
மலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர்: மலேஷிய பிரதமர் முகைதீன் யாசினின் அரசை ஆதரிக்க மறுத்த, முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, பெர்சத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள், நான்கு பேரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தெற்காசிய நாடான மலேஷியாவில், 2018ல் நடந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, 94, தலைமையிலான பெர்சத் கட்சி, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியுடனும், சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றது; மகாதீர் முகமது பிரதமரானார். தேர்தலுக்கு முன், மகாதீர் வெளியிட்ட அறிவிப்பில், 'கூட்டணி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட காலம் வரை, பிரதமர் பதவியை வகிப்பேன். நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிவிட்டு, அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பேன்' என, கூறியிருந்தார்.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சியை இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஆனால், மகாதீர் தயக்கம் காட்டினார். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரியில், மஹாதீர், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக, பெர்சத் கட்சியின் மூத்த தலைவர் முஹைதீன் யாசினை, மன்னர் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா நியமித்தார்.எனினும், யாசின் அரசுக்கு, மகாதீர் ஒத்துழைப்பு தரவில்லை.

இந்நிலையில், 18ம் தேதி நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், மகாதீர் பங்கேற்றார்.அப்போது, எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், அவர் அமர்ந்தார், இதையடுத்து, மகாதீர், பெர்சத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, அவருக்கு கட்சி தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், மகாதீரின் மகன் முக்ரீஸ் மகாதீர் உட்பட, அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

மூலக்கதை