தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர்

தினமலர்  தினமலர்
தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர்

கொச்சி: பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் உதவியால், கேரளாவிலிருந்து, 167 தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


பாலிவுட் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் சோனு சூட், 46. ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். சமூக சேவை செய்வதில் ஆர்வம் உள்ள சோனு சூட், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினக் கூலிகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும், மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் ஏழை தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் கூலி வேலை பார்த்து வந்த, 147 பெண்கள் உட்பட, 167 தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலமான ஒடிசாவுக்குச் செல்ல முடியாமல் தவிப்பதாக, சில தன்னார்வ அமைப்புகள் சார்பில், சோனு சூட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, அதில், 167 தொழிலாளர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதற்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றார். இந்த விமானம், நேற்று காலை, 8:00 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்பட்டு, காலை, 10:00 மணிக்கு புவனேஸ்வர் வந்தடைந்தது.


இது குறித்து சோனு சூட் கூறுகையில், ''வறுமையில் வாடுவோருக்கு சரியான நேரத்தில் உதவுவதை விட, வேறு பெரிய நற்செயல் எதுவும் இல்லை என கருதுகிறேன். என்னுடைய இந்த முயற்சிக்கு உதவிய, 'ஏர் ஏசியா' விமான நிறுவனத்துக்கு நன்றி,'' என்றார்.

மூலக்கதை