மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள் * யுவராஜ் சிங் வேண்டுகோள் | மே 29, 2020

தினமலர்  தினமலர்
மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள் * யுவராஜ் சிங் வேண்டுகோள் | மே 29, 2020

புதுடில்லி: ‘‘நமது மனிதநேயத்தை வெளிப்படுத்த இதைவிட சிறந்த நேரம் வேறு எதுவும் கிடையாது,’’ என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமெடுக்கிறது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுக்கின்றன.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வு பெற்ற ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங் கூறியது:

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் புதியதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,000க்கும் அதிகமாக உள்ளது. 

மக்கள் எல்லோரிடமும் கேட்டுக் கொள்வது ஒன்று தான்,‘தயவு செய்து எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள், சமூக விலகலை சரியாக பின்பற்றுங்கள். 

ஊரடங்கு நேரத்தில் உங்களால் என்ன முடியுமோ அதை, வசதி குறைந்த மக்களுக்கு கொடுத்து உதவுங்கள். நமது மனிதநேயத்தை வெளிப்படுத்த இதைவிட சிறந்த நேரம் வேறு எதுவும் கிடையாது. தவிர கொரோனா வைரசிடம் இருந்து முதலில் நமது தேசத்தை பாதுகாக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது 90 முதல் 95 சதவீதம் வரை பரவல் குறைய வேண்டும். ஏனெனில் இது தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் வீடுகளை விட்டு, மைதானங்களுக்கு வரவே பயப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை