கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு: 25 பாஜ எம்எல்ஏ.க்கள் திடீர் ஆலோசனை: எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா?

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு: 25 பாஜ எம்எல்ஏ.க்கள் திடீர் ஆலோசனை: எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா?

பெங்களூரு: கர்நாடாவில் 25 பாஜ எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது, ஆளும் கட்சியில் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் நடந்து வந்த மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியில் குழப்பம் இல்லை  என்பது போல் காணப்பட்டாலும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சி  தலைமைக்கு எதிராக அதிருப்தியில் இருப்பது நீருபூத்த நெருப்பாக இருந்து  வருகிறது. இந்நிலையில்,  நேற்று முன்தினம் பெலகாவியில் உள்ள பாஜ மூத்த எம்எல்ஏ உமேஷ்கத்தி வீட்டில்  வடகர்நாடகா, கல்யாண-கர்நாடகா பகுதியை சேர்ந்த 25 பாஜ எம்எல்ஏ.க்கள் திடீரென ரகசிய ஆலோசனை நடத்தினர்.இது  குறித்து எம்எல்ஏ உமேஷ்கத்தி கூறும்போது, ‘‘நாங்கள். கட்சிக்கு விரோதமாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம்.   எடியூரப்பாவை  நீக்கவோ,  ஆட்சி மாற்றம்  ஏற்படுத்தவோ இதை செய்யவில்லை.   ஊரடங்கு காரணமாக 2 மாதங்களாக யாரும் சந்திக்காமல் இருந்தோம்.   இப்போது ஊரடங்கை தளர்த்தியதால் சந்தித்து பேசினாம்்,’’ என்றார். இதற்கிடையில்,  ‘கட்சிக்கு விரோதமாக யார்  செயல்பட்டாலும் அவர்கள் மீது கட்சி விதிமுறைகள்படி நடவடிக்கை  எடுக்கப்படும். தேவையில்லாத குழப்பம் ஏற்படுத்துவது சரியல்ல,’ என்று பாஜ தலைமை எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.‘சித்தராமையாவை சந்திப்போம்’உமேஷ்கத்தி நடத்திய ரகசிய ஆலோசனையில் பங்கேற்ற பிறகு எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில்,  ‘‘சொந்த  கட்சி எம்எல்ஏ.க்கள் சந்தித்து பேச யாருடைய அனுமதியும் கேட்க வேண்டிய  அவசியமில்லை. என்ைன பொறுத்தவரை எடியூரப்பா மாநில முதல்வர் மட்டுமே. கட்சி  தலைவர் கிடையாது. எங்களுக்கு தலைவர் என்றால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மட்டுமே.  அவசியம்  ஏற்படும்போது முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரை  சந்தித்து பேசுவேன்,’’ என்றார். இவரது பேச்சு கட்சி தலைமைக்கு கலக்கத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை