பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தது கிருஷ்ணா நீர்

தினமலர்  தினமலர்
பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தது கிருஷ்ணா நீர்

ஊத்துக்கோட்டை : கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று, காலை, 10:45 மணிக்கு, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக, ஆந்திர அரசுகள் இடையே தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.இதன்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து இரண்டு தவணைகளில், ஒவ்வொரு ஆண்டும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும்.இதற்காக, கண்டலேறு அணையில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வரை, 152 கி.மீட்டர் மற்றும், அங்கிருந்து, 25 கி.மீ., பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது.

தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறக்குமாறு, ஆந்திர அரசை கேட்டுக் கொண்டது.கடந்த, 25ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு, 500 கன அடி வீதம், கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. பின், 1,200 கன அடியாக உயர்த்தப்பட்டது.அங்கிருந்து, ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியாக, தமிழக எல்லையான, ஊத்துக்கோட்டை, 'ஜீரோபாயின்டை' நேற்று முன்தினம், இரவு, 8:45 மணிக்கு வந்தடைந்தது.

கிருஷ்ணா நதிநீர் செயற்பொறியாளர் ஹென்றிஜார்ஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர்கள் பிரதீப், சதீஷ்குமார் மற்றும் ஆந்திர அதிகாரிகள் மலர் துாவி வரவேற்றனர். அங்கிருந்து, 25 கி.மீ., துாரமுள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை நேற்று, காலை, 10:45 மணிக்கு அடைந்தது.

மூலக்கதை