இந்தியாவின் ‘பெஸ்ட்’ கேப்டன் தோனி: கிர்மானி பாராட்டு | மே 29, 2020

தினமலர்  தினமலர்
இந்தியாவின் ‘பெஸ்ட்’ கேப்டன் தோனி: கிர்மானி பாராட்டு | மே 29, 2020

புதுடில்லி: ‘‘இந்திய கேப்டன்களில் தோனி தான் சிறந்தவர்,’’ என, சையது கிர்மானி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 38. இந்தியாவுக்கு 2 உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’ மற்றும் 2011ல் 50 ஓவர்) பெற்றுத் தந்த இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடருக்கு பின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் இவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.

இதுகுறித்து முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறியது: 

தோனிக்கு தனது எதிர்காலம் குறித்து நன்றாக தெரியும். ஆனால் அமைதியாக இருக்கிறார். தவிர எதிர்கால திட்டம் குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 

ஏனெனில் இவர், கிரிக்கெட் அரங்கில் தனது கனவு மற்றும் இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டார். இனி சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் ஓய்வு முடிவு, அவருடையது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வைத்து பார்க்கையில் இவர், ஐ.பி.எல்., தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல்., இவரது கடைசி தொடராக இருக்கலாம்.

என்னை பொறுத்தவரை இந்திய கேப்டன்களில் தோனி தான் சிறந்தவர். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தோனிக்கு இருக்கும் நற்சான்றிதழ்கள் வேறு யாருக்கும் இல்லை. இதனை நான் உரிய மரியாதையுடன் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இப்படி சொல்வதால், எனக்கு கேப்டனாக இருந்தவர்களுக்கு மனதளவில் காயத்தை ஏற்படுத்தக்கூடும். சில உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

இவ்வாறு கிர்மானி கூறினார்.

மூலக்கதை