ரோகித் சர்மா சாதித்தது எப்படி: லட்சுமண் விளக்கம் | மே 29, 2020

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா சாதித்தது எப்படி: லட்சுமண் விளக்கம் | மே 29, 2020

புதுடில்லி: ‘‘போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை, ரோகித் சர்மாவை சிறந்த ஐ.பி.எல்., கேப்டனாக சாதிக்க உதவியது,’’ என, லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் இந்தியாவின் ரோகித் சர்மா 33, மும்பை அணிக்கு கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் மும்பை அணி அதிகபட்சமாக 4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பை வென்றது. இவர், தனது ஐ.பி.எல்., பயணத்தை டெக்கான் அணிக்காக (2008–2010, 45 போட்டி, 1170 ரன்கள்) துவக்கினார்.

இதுகுறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் லட்சுமண் 45, கூறியது: கடந்த 2008ல் டெக்கான் அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா, இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமான இளம் வீரராக இருந்தார். அப்போது ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கிய இவர், ஓரளவு கைகொடுத்தார். இத்தொடரில் டெக்கான் அணியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவருக்கு டெக்கான் அணியின் கேப்டன் பொறுப்பு தேடி வந்தது.

பின், மும்பை அணியை வழிநடத்திய இவரது செயல்பாடு ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் கண்டது. குறிப்பாக போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை இவர் கையாண்ட விதம், பாராட்டுக்குரியது. பேட்டிங்கில் இவரது பங்களிப்பு அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. இதனால் தான் இவரால் ஐ.பி.எல்., அரங்கில் சிறந்த கேப்டனாக ஜொலிக்க முடிகிறது.

இவ்வாறு லட்சுமண் கூறினார்.

மூலக்கதை