ஆபத்தானதா உலக கோப்பை * அலறுகிறது ஆஸி., | மே 29, 2020

தினமலர்  தினமலர்
ஆபத்தானதா உலக கோப்பை * அலறுகிறது ஆஸி., | மே 29, 2020

மெல்போர்ன்: ‘‘உலக கோப்பை தொடரை நடத்துவது மிக ஆபத்தானது,’’ என ஆஸ்திரேலிய தலைமை அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரும் அக்., 18 முதல் நவ. 15 வரை ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆனால் கொரோனா காரணமாக இத்தொடர் திட்டமிட்டபடி நடப்பது சந்தேகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் செப். 30ம் தேதி வரை எல்லைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் வீரர்கள் செல்வது, பயிற்சிகளில் ஈடுபடுவதும் பாதிக்கப்படும்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறியது:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,), ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நேரம் தான் சிக்கலாக உள்ளது. இருப்பினும் வரும் அக்.,–நவ.,ல் இத்தொடர் நடக்கும் என நம்புகிறோம். ஆனால் தற்போதைய சூழலில் உலக கோப்பை தொடர் நடைபெறுவது மிக ஆபத்தானது. இதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட அட்டவணையில் நடக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு பிப்.,–மார்ச், அக்.,–நவ.,ல் நடத்தலாம். 

மாகாண எல்லைகள் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்திய தொடர் அட்டவணை முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் கூட போட்டிகள் நடத்தலாம். எதுவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.


முடிவு இல்லை

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்க நடந்த ஐ.சி.சி., கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. வரும் ஜூன் 10ம் தேதி மீண்டும் ‘டெலி கான்பெரன்சிங்’ வழியாக நடக்கவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவு தெரியும் எனத் தெரிகிறது.

மூலக்கதை