3-ம் நபர் தலையீடு தேவையில்லை; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் எங்களுக்கு உள்ளது...அதிபர் டிரம்பிற்கு சீனா பதில்...!

தினகரன்  தினகரன்
3ம் நபர் தலையீடு தேவையில்லை; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் எங்களுக்கு உள்ளது...அதிபர் டிரம்பிற்கு சீனா பதில்...!

பெய்ஜிங்: லடாக் அருகே தனது விமானப்படை தளத்தை சீனா விரிவுபடுத்துவது, திபெத்தில் உள்ள காரி குன்சா விமான நிலையம் அருகே பெரிய கட்டிடங்கள் எழுப்புவது செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில்,  சீனாவின் ஜெ-11, ஜெ-16 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக நேற்று முன்தினம் சீன அரசின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் நாடு திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக திரும்பும்படி கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சாலை அமைப்பதை விரும்பாத சீனா, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், லடாக் யூனியன் பிரதேசத்தின் பான்காங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக்  மற்றும் தவுலத் பெக் ஓல்டி எல்லைப் பகுதிகளில் சீனா வேகமாக படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் தனது எல்லைக்கு உட்பட்ட  எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களை சீனா அமைத்துள்ளது. சீனாவின் இந்த  நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன்  மட்டுமின்றி, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையிலும் உள்ளது. சீனாவின் இந்த செயல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அதிபர்  டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது நடந்து வரும் எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த வாய்ப்பிற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன்  பதிலளித்துள்ளார். இராணுவ நிலைப்பாட்டைத் தீர்க்க மூன்றாம் தரப்பினரின் \'தலையீட்டை\' இரு நாடுகளும் விரும்பவில்லை என்று கூறினார். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு  சேனல்கள் உள்ளன\' என்று ஜாவோ செய்தியாளர்களிடம் கூறினார். \'உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் எங்களுக்கிடையேயான பிரச்சினைகளை முறையாக தீர்க்கும் திறன் எங்களுக்கு உள்ளது. மூன்றாம் தரப்பினரின் தலையீடு  எங்களுக்கு தேவையில்லை\' என்று அவர் கூறினார். மத்தியஸ்தம் தேவையில்லை என இந்தியாவை தொடர்ந்து சீனாவும் அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை