பிராமணர்களை இழிவுப்படுத்தும் 'வெப் சீரியல்' குறித்து போலீசில் புகார்

தினமலர்  தினமலர்
பிராமணர்களை இழிவுப்படுத்தும் வெப் சீரியல் குறித்து போலீசில் புகார்

சென்னை : 'ஹிந்துக்கள் மற்றும் பிராமணர்களை இழிவுப்படுத்தி வரும், சினிமா, 'டிவி' மற்றும், 'வெப் சீரியல்' இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திருச்சியை சேர்ந்தவர், ஜெயபிரகாஷ். அந்தணர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின், நிறுவன தலைவரான இவர், 'ஆன்லைன்' வாயிலாக, போலீசாரிடம் அளித்துள்ள புகார்:'ஜீ' தமிழ் சேனல் சார்பில் ஒளிபரப்பப்படும், 'வெப்' சீரியலில், 'காட்மேன்' என்ற தொடர் வெளிவர இருப்பதாக, முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில், 'பிராமணன் மட்டும் தான் வேதம் படிக்க வேண்டும் என, எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது; சுற்றி இருக்கக் கூடிய, எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக இருக்கின்றனர். 'இந்த உலகிற்கு, பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என, காட்டப் போகிறேன். அதனால், நீ பிராமணன் ஆக வேண்டும் அய்யனாரே' என்ற வசனம் உள்ளது.

அத்துடன், ஹிந்து சாமியார் கைது செய்யப்படுவது போலவும், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுஉள்ளன. இது, வன்மைஆக கண்டிக்கத்தக்கது.சினிமா மற்றும் சீரியல்களில், ஹிந்துக்கள் மற்றும் பிராமணர்கள் பற்றி தொடர்ந்து இழிவுப் படுத்தப்படுகிறது. தற்போது, வெப் சீரியலிலும் அது தொடர்கிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், இதுபோன்று செயல்படும் கயவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேனல்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், 'டிராய்' அமைப்பும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்ய கோரிக்கை

'பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட, 'காட்மேன்' என்ற, 'வெப் சீரியலை' தடை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்காக, 'காட்மேன்' என்ற, வெப் சீரியல் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட உள்ளது. இதன் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பிராமண சமூகத்தினை இழிவுப்படுத்தும் வகையிலும், ஹிந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கு வகையிலும் காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கருத்துரிமையை கெட்ட உள்நோக்கத்துடன், வார்த்தைகளை தவறாக பயன்படுத்தி, அனைத்து சமூகத்திற்கும் ஊறு விளைவிக்க முற்பட்டுள்ளனர்.இந்திய தண்டனை சட்ட பிரிவுகள், 153 - ஏ, 295 - ஏ, 298 ஆகியவற்றின் கீழ், இப்படம் தொடர்புடையவர்கள் மீது, காவல்துறையினர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இந்த சீரியலை எந்த ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என, உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த விஷயம், தமிழக முதல்வர், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சமூகங்கள் இடையேயான நல்லிணக்கம், ஹிந்து ஒற்றுமையின் அவசியத்திற்கு பாடுபடுபவர்கள், இப்படத்தை தடை செய்யும்படி, கோரிக்கை விடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை