கடைசியாக ஏப். 4-ல் பேச்சு: சமீப காலங்களில் பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடக்கவில்லை...இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்...!

தினகரன்  தினகரன்
கடைசியாக ஏப். 4ல் பேச்சு: சமீப காலங்களில் பிரதமர் மோடி  ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடக்கவில்லை...இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்...!

டெல்லி: கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்திருப்பதாகவும், இந்திய கட்டுப்பாட்டுக்குள்ள 4 கிலோ மீட்டர் வரை உள்ளே வந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய  ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்காலிக கூடாரங்கள் அமைத்தல் மற்றும் பதுங்கும் குழிகள் போன்றவை அமைக்கும் நோக்குடன் கனரக  இயந்திரங்களை சீன ராணுவம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியா, சீன ராணுவத்தை விட அதிக வீரர்களை குவித்துள்ளது.இதற்கிடையே, நேற்று வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் சீனாவுடனான \'பெரிய மோதல்\' குறித்து பேசினேன். இந்தியப் பிரதமர் \'நல்ல  மனநிலையில்\' இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன், அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியாவும் சீனாவும் ஒவ்வொன்றும் 140 கோடி மக்களைக் கொண்ட இரண்டு நாடுகள். மிகவும் சக்திவாய்ந்த ராணுவங்களை கொண்ட  நாடுகள். இந்தியா மகிழ்ச்சியாக இல்லை, அநேகமாக சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை என கூறினார்.மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் அமெரிக்கா தயாராக  இருப்பதாகவும், இரு நாடுகள் எல்லை பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகவும் அமெரிக்காவால் தீர்க்க முடியும் என்றும் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த ட்ரம்பின் பேச்சுக்கு விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், சமீப காலங்களில் பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளனர். கடைசியாக, பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்து குறித்து பேசியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மூலக்கதை