மறக்க முடியுமா? முரட்டுக்காளை

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா? முரட்டுக்காளை

வெளியான ஆண்டு: 1980

நடிகர்கள்: ரஜினி, ஜெய்சங்கர், ரதி, சுமலதா, சுருளிராஜன்

இயக்குனர்: எஸ்.பி.முத்துராமன்

தயாரிப்பு: ஏ.வி.எம்.,

'சூப்பர் ஸ்டார்' உச்சத்திற்கு, படிகளில் ஏறிக்கொண்டிருந்த ரஜினியை, 'லிப்ட்'டில் ஏற்றி, உயரத்திற்கு அழைத்துச் சென்ற படம், முரட்டுக்காளை!ஏ.வி.எம்., தயாரிப்பில், ரஜினி நடித்த முதல் படம் இது. பழிக்குப் பழி வாங்கும், சாதாரணக் கதை தான். ஆனால் அதை, கிராமத்து பின்னணியோடு, அட்டகாசமான திரைக்கதையில் பின்னியிருந்தார், பஞ்சு அருணாசலம். இப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்திற்கு, அதிக முக்கியத்துவம் உண்டு. அதற்காக, கதாநாயகனாக நடித்து வந்த ஜெய்சங்கரை, இப்படத்தில் வில்லனாக நடிக்க வைத்தனர்.

இப்படத்தில் இடம்பெற்ற மஞ்சுவிரட்டும். ரயில் சண்டை காட்சிகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. காரைக்குடி அருகே உள்ள, பாகனேரி என்ற இடத்தில், நிஜமாக நடந்த மஞ்சுவிரட்டு விழாவில், ரஜினியை பங்கேற்க செய்து, படம் பிடிக்கப்பட்டது.'கிளைமேக்ஸ்' ரயில் சண்டை காட்சி, அக்காலத்தில் சிலாகித்து பேசப்பட்டது. ஜூடோ ரத்தினத்தின் சண்டைக்காட்சியும், பாபுவின் ஒளிப்பதிவும், அக்காட்சியின் பரபரப்பிற்கு காரணமாகின.

படத்தின் மாபெரும் வெற்றிக்கு, இளையராஜாவின் இசையும் முக்கிய காரணம். 'பொதுவாக எம்மனசு தங்கம்...' என்ற பாடல், இன்றும், ரஜினி ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடலாக உள்ளது.'காளையன்' கதாபாத்திரத்தில், வித்தியாசமான, 'விக்' அணிந்து, நடித்திருந்தார் ரஜினி. தலைமுடியை கோதி, கை விரலால் வித்தை காட்டி, 'சீவிடுவேன்' என, ரஜினி பேசிய, 'பஞ்ச்' வசனத்திற்கு, தியேட்டர்களில் விசில் பறந்தது.என்ன... இப்போது நீங்கள், அதே மாதிரி செய்து பார்க்கிறீகளா... அது தான், ரஜினி!

மூலக்கதை