பிரிஸ்பேனில் முதல் ‘டுவென்டி–20’: இந்தியா–ஆஸி., அட்டவணை வெளியீடு | மே 28, 2020

தினமலர்  தினமலர்
பிரிஸ்பேனில் முதல் ‘டுவென்டி–20’: இந்தியா–ஆஸி., அட்டவணை வெளியீடு | மே 28, 2020

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி பிரிஸ்பேனில் வரும் அக். 11ல் நடக்கிறது.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ‘டுவென்டி–20’, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘கொரோனா’ காரணமாக இதற்கான அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில் 2020–21க்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி பங்கேற்கவுள்ள தொடருக்கான அட்டவணையும் இடம் பெற்றிருந்தது. இதன்படி முதல் ‘டுவென்டி–20’ போட்டி பிரிஸ்பேனில் வரும் அக். 11ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் கான்பெரா (அக். 14), அடிலெய்டு (அக். 17) நகரங்களில் நடக்கவுள்ளன.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி வரும் டிச. 3–7ல் பிரிஸ்பேனில் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில், வரும் டிச. 11–15ல் நடக்கவுள்ளது. மெல்போர்னில் வரும் டிச. 26–30ல், 3வது டெஸ்ட் ‘பாக்சிங்டே’ போட்டியாக நடத்தப்படுகிறது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் 2021, ஜன. 3–7 ல் சிட்னியில் நடக்க உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி அடுத்த ஆண்டு ஜன. 12ல் பெர்த்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் மெல்போர்ன் (ஜன. 15), சிட்னியில் (ஜன. 17) நடக்கவுள்ளன.

இதுகுறித்து சி.ஏ., தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு முடிந்தவரை சர்வதேச போட்டிகளை நடத்துவற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முதல் நடவடிக்கையாக அட்டவணையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்,’’ என்றார்.

இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி கான்பெராவில் அடுத்த ஆண்டு ஜன. 22ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் மெல்போர்ன் (ஜன. 25), ஹோபர்ட் (ஜன. 28) நகரங்களில் நடக்கவுள்ளன.

இந்திய டெஸ்ட் தொடருக்கான அட்டவணையில் பெர்த் மைதானத்திற்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் இங்கு இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு ஒருநாள் போட்டி (ஜன. 12) மட்டும் நடக்கவுள்ளது. இதனால் மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் (டபிள்யு.ஏ.சி.ஏ.,) ஏமாற்றம் அடைந்துள்ளது. இதுகுறித்து டபிள்யு.ஏ.சி.ஏ., தலைவர் கிறிஸ்டினா மாத்யூஸ் கூறுகையில், ‘‘பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தை விட, பெர்த்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆப்டஸ் மைதானம் அனைத்து வகையிலும் சிறந்தது. ஆனால் இங்கு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடத்தப்படாதது ஏமாற்றம்,’’ என்றார்.

இந்திய அணி, கடந்த முறை பெர்த்தில் ஒரு டெஸ்டில் விளையாடியது. இம்முறை இங்கு, ஆப்கானிஸ்தான்–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் (நவ. 21–25) நடக்கவுள்ளது.

மூலக்கதை