செயற்கையான பொருளுக்கு அனுமதி: பவுலிங் பயிற்சியாளர் ஆலோசனை | மே 28, 2020

தினமலர்  தினமலர்
செயற்கையான பொருளுக்கு அனுமதி: பவுலிங் பயிற்சியாளர் ஆலோசனை | மே 28, 2020

புதுடில்லி: ‘‘பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதிலாக செயற்கையான பொருளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்,’’ என, பரத் அருண் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் வருகின்றன. ஏற்கனவே வீரர்கள் கைகுலுக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்திய சுழல் ‘ஜாம்பவான்’ அனில் கும்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கமிட்டி, பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதிக்க பரிந்துரை செய்தது. இதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது.

இதுகுறித்து இந்திய அணியின் ‘பவுலிங்’ பயிற்சியாளர் பரத் அருண் கூறியது: 

பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த அனுமதி மறுப்பது பவுலர்களுக்கு கடினமானது. அப்படியென்றால், இதற்கு மாற்று வழி இருக்க வேண்டும். வியர்வை மோசமானதல்ல. ஆனால் இதைவிட சிறப்பான ஒன்று வேண்டும் என்று நினைக்கிறேன். 

அது, மெழுகு அல்லது வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அனைத்து அணிகளும் ஒரே மாதிரியான செயற்கையான பொருளை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க அனுமதிக்கலாம். கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும் வரை, இதற்கு அனுமதிக்க வேண்டும். 

அப்போது தான் போட்டி, பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையிலான மோதலாக இருக்கும். இப்பழக்கத்தில் இருந்து விடுபட, பயிற்சியின் போதிருந்தே முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு பரத் அருண் கூறினார்.

மூலக்கதை