மறக்க முடியாத இந்தியா * கிறிஸ்டன் உற்சாகம் | மே 28, 2020

தினமலர்  தினமலர்
மறக்க முடியாத இந்தியா * கிறிஸ்டன் உற்சாகம் | மே 28, 2020

 புதுடில்லி: ‘‘இந்திய அணிக்கு பயிற்சி தந்த நாட்கள் என்றும் என் நினைவில் நிற்கும்,’’ என கிறிஸ்டன் தெரிவித்தார். 

இந்திய அணிக்கு கடந்த 2008 முதல் 2011 வரை தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன் 52, பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2011ல் இவரது பயிற்சியில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக ஒருநாள் உலக கோப்பை வென்றது. 

இதுகுறித்து கிறிஸ்டன் கூறியது:

இந்திய அணிக்கு பயிற்சி கொடுப்பதை மிகவும் விருப்பத்துடன் செய்தேன். எனது வாழ்க்கையில் கிடைத்த சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்று. இந்திய வீரர்களுக்கு பயிற்சி தந்த நாட்கள் சிறப்பானவை. உலக கோப்பை தொடர் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். இதில் சாதிக்க வேண்டும் என அனைத்து வீரர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தன. கடைசியில் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு சாதித்தனர். 

தோனியை பொறுத்தவரையில் வியக்கத்தக்க வீரர். கிரிக்கெட் குறித்த நுட்பமான அறிவு, அமைதியான குணம், சிறப்பாக செயல்படும் ஆற்றல் தவிர, ‘மேட்ச் வின்னர்’ என இவைகள் எல்லாம் மற்றவர்களிடம் இருந்து அவரை தனித்துக் காட்டின. தவிர இவைகள் தான் நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரராக தோனியை உயர்த்தின.

இவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என யாரும் முடிவு செய்யக் கூடாது. இதற்கான உரிமை அவருக்கு உள்ளது. ‘ஜாம்பவான்’ சச்சினுடன் பணி செய்தது எளிதாக இருந்தது. 2011ல் கோஹ்லி சிறந்த வீரராக இருந்தார். தற்போது மிகச் சிறந்தவர் ஆகி விட்டார். 

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை