பொன்மகள் வந்தாள் - சினிமா பிரபலங்களுக்கு எதிர்ப்பு

தினமலர்  தினமலர்

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ஓடிடி தளங்கள் நேரடியாக திரைப்படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்துள்ளது தியேட்டர்காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அப்படி பொன்மகள் வந்தாள் படத்தை நாளை(மே 29) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்கள். தியேட்டர்காரர்கள், வினியோகஸ்தர்கள் எதிர்ப்புகளை மீறி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனாலும், இப்படத்தை எப்படியாவது மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் என பல வழிகளில் அமேசான் தளம் முயன்று வருகிறது.

பல சினிமா பிரபலங்களை வைத்து இப்படம் நாளை அவர்களது தளத்தில் வெளியாவதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட வைத்துள்ளது.

ஓடிடி தளங்களில் நேரடியாகப் படங்கள் வெளியாவது சினிமாவிற்கு பாகதமானது என சினிமாவில் உள்ள பலர் நினைக்கிறார்கள். அதே சமயம் சில பிரபலங்கள் இப்படி ஓடிடி தளங்களில் வெளியாகும் படத்திற்கு விளம்பரம் செய்து வருவது திரையுலகத்தில் உள்ள ஓடிடி எதிர்ப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தைத் தயாரித்துள்ள சூர்யா குடும்பத்தினருக்கு ஏற்கெனவே எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர் தியேட்டர்காரர்கள். தற்போது ஓடிடிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் அவர்களது எதிர்ப்பு பாயும் என சொல்கிறார்கள்.

மூலக்கதை