யுவனுடன் பிரச்சினை இல்லை - சீனு ராமசாமி

தினமலர்  தினமலர்
யுவனுடன் பிரச்சினை இல்லை  சீனு ராமசாமி

'தென்மேற்குப் பருவக்காற்று' படம் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கி முடித்துள்ள 'இடம் பெருள் ஏவல், மாமனிதன்' ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்று அவருக்கே தெரியாத ஒரு நிலைதான் உள்ளது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்த 'இடம் பொருள் ஏவல்' படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிதி சிக்கலில் சிக்கியதால் அந்தப் படம் வரவில்லை. இப்படம் விரைவில் வெளியாகும் என கடந்த வாரம் பரபரப்பான செய்தி வெளிவந்தது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் படம் எப்போது வரும் என்பதை நாங்களே அறிவிக்கிறோம் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படமும் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்றும் தெரியாமலேயே உள்ளது. இதனிடையே படத்தின் இயக்குனரான சீனு ராமசாமி டுவிட்டரில், “மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் ஆர்ஆர்-ஐ இளையராஜா முடித்து விட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு அரேஞ்ச்மென்ட் செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை,” எனப் பதிவிட்டு படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவை டேக் செய்திருந்தார்.

அந்தப் பதிவிற்கு ஒரு ரசிகர், “என்னதான்யா உனக்கும் யுவனுக்கும் பிரச்சினை” எனக் கேட்டிருந்தார். அதற்கு சீனு ராமசாமி, “எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் இல்ல” என்று பதிலளித்துள்ளார்.

'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கும் முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்படம் எப்போது வெளிவரும் என யுவன் ஷங்கர் ராஜா விரைவில் அறிவிப்பாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

மூலக்கதை