கோவை தொழில்துறைக்கு நல்லகாலம்! நம்பிக்கை தரும் ராணுவ தளவாட சோதனை கட்டமைப்பு

தினமலர்  தினமலர்
கோவை தொழில்துறைக்கு நல்லகாலம்! நம்பிக்கை தரும் ராணுவ தளவாட சோதனை கட்டமைப்பு

கோவை:ராணுவ தளவாட சோதனை கட்டமைப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, கோவை உட்பட தமிழகத்தின் தொழில் நகரங்களுக்கு, கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நம் நாட்டில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ தளவாட ஆலைகளில், வெடிபொருள், துப்பாக்கி, ரேடார், மின்னணு உபகரணங்கள் உட்பட, ராணுவத்தளவாடங்களை சோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், கடந்த 15ம் தேதி, ராணுவ தளவாட சோதனை கட்டமைப்பு திட்டத்துக்கு, அனுமதி வழங்கியுள்ளார். இது கோவை உட்பட, தமிழகத்தின் தொழில் நகரங்களுக்கு பெரிதும் உதவும் என்று, தொழில்துறையினர் கூறுகின்றனர்.
தொழில்துறையினர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் 'ஸ்டார்ட் அப்'களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில், சென்னை, திருச்சி, சேலம், ஒசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையில், ராணுவத் தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த நகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ராணுவத்தளவாடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் பங்குராணுவத் தளவாட சோதனை கட்டமைப்புத்திட்டம், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தளவாட தரச்சோதனை வசதிகளுக்கு, 75 சதவீதம் மத்திய அரசும், எஞ்சிய 25 சதவீதத்தை தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யு.ஏ.வி.,(ஆளில்லா வாகனங்கள்), ரேடார், டிரோன், கப்பல் நகர்வு, தொலைதொடர்பு கருவிகள் மற்றும் அதிர்வு, வெடிப்பு, சுற்றுச்சூழல் தரச்சோதனைகளை, மேற்கொள்ள முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அன்னிய செலாவணி மிச்சம்
ராணுவத்தளவாடம் மற்றும் உதிரிபாக உற்பத்தியை அதிகரிப்பதன் வாயிலாக, நம் நாட்டு ராணுவம் சுயசார்புடன் செயல்பட முடியும். இறக்குமதி குறைவதால், அன்னியச்செலாவணி மிச்சமாகும். ஏற்றுமதியையும் அதிகரிக்கலாம். தற்போது, ஆண்டுக்கு, நம் நாட்டில் இருந்து 17 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதியாகின்றன. இதை, அடுத்த ஐந்தாண்டுகளில், 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை