பெற்றோர் கண்முன்னே விபரீதம்120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்: மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு தீவிரம்

தினகரன்  தினகரன்
பெற்றோர் கண்முன்னே விபரீதம்120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்: மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு தீவிரம்

திருமலை: தெலங்கானா, சங்கா ரெட்டி  மாவட்டத்தில் பாதான்சேருவை சேர்ந்தவர் மங்கலி கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது 3வது மகன் சாய் வர்தன். கோவர்தன் குடும்பத்தினர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மேதக் மாவட்டம், போட்சனாபல்லி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில், கோவர்தனின் மாமா பிட்சாதிபதிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலங்களை பார்ப்பதற்காக நேற்று கோவர்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர். இதற்கிடையே, பிட்சாதிபதி விவசாயத்திற்காக தனது  நிலத்தில் ஏற்கனவே இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு போட்டு தண்ணீர் வராததால் மீண்டும் நேற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து 120 அடி வரை ஆழ்துளை போட்டும் தண்ணீர் வராததால் அதனை அப்படியே விட்டு விட்டு அவரவர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சாய்வரதன் பெற்றோர் கண் எதிரிலேயே புதிதாக போட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் அலறித்துடித்தனர். சாய்வரதனை மீட்க முயன்றும் முடியாததால் கண்ணீருடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஐதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மூலக்கதை