ஆயுர்வேத சிகிச்சையளிக்க பதஞ்சலிக்கு அனுமதி?: காங்., கடும் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
ஆயுர்வேத சிகிச்சையளிக்க பதஞ்சலிக்கு அனுமதி?: காங்., கடும் எதிர்ப்பு

இந்துார் : 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டும்' என, யோகா குரு, பாபா ராம்தேவின், 'பதஞ்சலி' நிறுவனம், மத்திய பிரதேச அரசிடம் மனு கொடுத்துள்ளது. இதற்கு, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் யோகா குரு, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், பல்வேறு ஆயுர்வேத மருந்துகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் அளித்து சிகிச்சையளிக்க அனுமதி கோரி, இந்துார் மாவட்ட கலெக்டரிடம், பதஞ்சலி நிறுவனம் மனு கொடுத்தது. பின், முதல்வர் சவுகானை, ராம்தேவ் சந்தித்து பேசினார். இதையடுத்து, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க, பதஞ்சலி நிறுவனத்துக்கு இந்துார் கலெக்டர் அனுமதியளித்துவிட்டதாக தகவல் பரவியது.


இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி காங்., மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் கூறுகையில், 'நாட்டின் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் அனுமதியின்றி, எந்த நோய்க்கும் யாரும், எந்த மருந்தையும் அளித்து சிகிச்சையளிக்க முடியாது. ஆனால், மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் அனுமதியன்றி, பதஞ்சலி நிறுவனத்துக்கு, கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க, கலெக்டர் அனுமதியளித்துள்ளது கண்டனத்துக்குரியது' என்றார்.


இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை என, இந்துார் கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என, பதஞ்சலி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை