புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250

தினகரன்  தினகரன்
புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250

சென்னை: புதிய வயவந்தனா திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.  வயவந்தனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. 60 வயதுக்கு மேல் உள்ள குடிமகன்களுக்கு ஓய்வூதிய திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த எல்ஐசி நிறுவனத்துக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட விகிதத்தில் புதிய வயவந்தனா திட்டத்தை எல்ஐசி அறிவித்துள்ளது. இது கடந்த 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31 வரை மூன்று நிதியாண்டுகளுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும்.  இதில் நேரடியாக எல்ஐசி அலுவலகத்துக்கு சென்றும், ஆன்லைன் மூலமாகவும் இந்த திட்டத்தில் சேரலாம். பாலிசி காலம் 10 ஆண்டு. நடப்பு நிதியாண்டில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி வருவாய் உண்டு. பாலிசி காலமான 10 ஆண்டுகளுக்கு வட்டி பலன் மாதந்தோறும் கணக்கிட்டு வழங்கப்படும்.  அடுத்த 2 நிதியாண்டுகளுக்கான வட்டி விகிதம், அந்தந்த நிதியாண்டில் நிதியமைச்சகத்தால் முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ஒருவர் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக மாதம் 9,250, காலாண்டுக்கு 27,750, அரையாண்டுக்கு 55,500, ஆண்டுக்கு 1,11,000 பென்ஷன் கிடைக்கும். 3 பாலிசி ஆண்டுக்கு பிறகு 75% வரை கடன் பெறவும் வசதி உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.

மூலக்கதை