'டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்' ; ஜோ பிடன் கடும் தாக்கு

தினமலர்  தினமலர்
டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள் ; ஜோ பிடன் கடும் தாக்கு

வாஷிங்டன் : ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார்.

நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன் முக கவசம் அணிய மறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்' என கிண்டல் செய்ததை, டிரம்ப், 'டுவிட்டரில்' தன்னை பின்தொடரும், எட்டு கோடி பேருக்கு, 'ரீ டுவிட்' செய்தார்.

இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, '' ஜோ பிடன் முக கவசம் அணியலாம். ஆனால், அவர் வெளியிடத்தில், நல்லதொரு சூழலில், இதமான தட்பவெப்பத்தில், தன் மனைவியின் அருகில் இருக்கும் போது, முக கவசம் அணிந்தது, எனக்கு அசாதாரணமாக தெரிந்தது,'' என, டிரம்ப் தெரிவித்தார். இதற்கு, 'சி.என்.என்., டிவி'யில், ஜோ பிடன் பதில் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:உலகம் முழுதும், கொரோனா பரவலை தடுக்க, பலரும் முக கவசம் அணிகின்றனர். ஆனால் டிரம்ப், முக கவசம் அணிய மறுக்கிறார். மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அவர், கொரோனாவை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்காமல், தன் முனைப்புடன் நடந்து கொண்டதால், கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவர் ஒரு முட்டாள்; வடிகட்டிய முட்டாள். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை