சென்னையில் ரூ.140 கோடி கோவில் நிலம், 'ஸ்வாகா'; கட்டடம் கட்டவிட்டு அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை

தினமலர்  தினமலர்
சென்னையில் ரூ.140 கோடி கோவில் நிலம், ஸ்வாகா; கட்டடம் கட்டவிட்டு அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை

சென்னை : சென்னை, மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 140 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டு வருவது, ஆன்மிக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது.வணிக வளாகம்தொல்லியல் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், உலக பண்பாட்டு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலுக்கு சொந்தமாக, மாடம்பாக்கம் உட்பட பல இடங்களில், 46 ஏக்கர், 23 சென்ட், புஞ்சை நிலங்களும்; 26 ஏக்கர், 69 சென்ட் நஞ்சை நிலங்களும் உள்ளன.இதில், ராஜகீழ்ப்பாக்கம் - -மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 7 ஏக்கர், 57 சென்ட் நிலம், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, ஆன்மிக பெரியவர்கள் கூறியதாவது:கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்களின் பெரும் பகுதி, குடியிருப்புகளாகவும், விவசாய நிலங்களாகவும் உள்ளன.தற்போது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில், அனுமதியின்றி வணிக வளாகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதில், வணிக வளாகம், தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இதை, மாடம்பாக்கம், 'சாந்தி ஹார்டுவேர்ஸ்' எனும் கடையின் உரிமையாளர், என்.சி.செல்வகுமார் என்பவர் கட்டி வருகிறார்.இவர், மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவராக உள்ளார். அதனால், கோவிலின் செயல் அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் சரிகட்டி, கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், ஆக்கிரமிப்பாளரிடம் பெரிய தொகையை பெற்று, இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். மேலும், புகார் அளிக்க அழைத்தவரிடம், 'உன் வேலையை மட்டும் பார்' எனக் கூறியுள்ளார்.

கோவிலுக்குச் சொந்தமான, 95 சதவீத நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சி இருந்த, 7 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது, வேதனை அளிக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின், மொத்த சந்தை மதிப்பு, 140 கோடி ரூபாய்.இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை ஒழுங்குபடுத்தி, அவர்களிடம், நிலங்களுக்கான தரை வாடகை மற்றும் வரி வசூலித்தாலே, ஆண்டிற்கு, 10 கோடி ரூபாய்க்கும் மேல், கோவிலுக்கு வருமானம் கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

மாடம்பாக்கம், கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் கூறியதாவது:சம்பந்தப்பட்ட நிலம், தங்களுக்கு சொந்தமானது எனவும், அதை, அளந்து கொடுக்குமாறும், தேனுபுரீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர், சில மாதங்களுக்கு முன் கேட்டார்.தொடர்ந்து, நிலத்திற்கான ஆவணங்களை சரி பார்த்து, அதை, முழுவதுமாக அளந்து பார்த்தோம். அதில், நிலம் முழுவதும், கோவிலுக்குச் சொந்தமானது என, உறுதியானது.

பின், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, தாசில்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், போலீஸ் உதவியுடன், ஆக்கிரமிப்பு களை அகற்றி விடுங்கள் என, செயல் அலுவலரிடம் கூறினார்.புறம்போக்கு நிலமாக இருந்தால், நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்க முடியும்.கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால், அதன் செயல் அலுவலர் தான், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

கோவில் செயல் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:ஆக்கிரமிப்பு தொடர்பாக, மார்ச், 22ல், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.நடவடிக்கைகொரோனா காரணமாக, போலீசார் நடவடிக்கை எடுப்பதில், தாமதம் ஏற்பட்டதுடன், கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.ஊரடங்கில் தளர்வு அறிவித்ததால், கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இது தொடர்பாக, செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.அதில், கட்டுமான பணிக்கு, விரைவில் தடை கிடைக்கும் என, எதிர்பார்த்துள்ளோம். தாம்பரம் தாசில்தாரிடம், ஆக்கிரமிப்பு குறித்து எடுத்துக் கூறி, அதை அகற்ற அனுமதி கேட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

குழு அமைக்குமா ஐகோர்ட்?மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ஜி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கோவில் நிலங்கள் தனியார் வசம் இருந்தால், சூறையாடப்படும் என்பதாலேயே, ஹிந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, தொன்மையான கோவில்களின் பராமரிப்பு, அத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.தற்போது, மாநிலம் முழுதும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், இத்துறையின் கீழ் உள்ளன. இக்கோவில்களின் சொத்துக்கள், சில அரசியல்வாதிகளாலும், தனியாராலும் சூறையாடப்பட்டு, வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி உள்ளன.

இதற்கு, சம்பந்தப்பட்ட கோவில்களில் உள்ள, அறநிலையத் துறை அதிகாரிகளே காரணம். இதை, துறை அமைச்சரும், தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உயர் நீதிமன்றம் தலையிட்டு, சிறப்புக் குழு அமைத்து, மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலின் சொத்து உட்பட, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில்களின் சொத்துக்களுக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.அதில், ஆக்கிரமிப்புகள் இருந்தால், அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை