டெங்கு காய்ச்சல் எதிரொலி; கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

தினமலர்  தினமலர்
டெங்கு காய்ச்சல் எதிரொலி; கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை : சென்னையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே உள்ளதால், டெங்கு பரப்பும், கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு, களப்பணியாளர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடையாறு மண்டலம், 180வது வார்டு, தரமணியைச் சேர்ந்த, 6 வயது சிறுமிக்கு, டெங்கு காய்ச்சல் பாதித்தது. சென்னையில் ஆங்காங்கே சிலர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி:

பொதுவாக, ஜூலை முதல் டிசம்பர் வரை, டெங்கு காய்ச்சல் பரவலாக காணப்படும். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில், டெங்கு பரவுவது, சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.கொரோனாவை போல், டெங்கு காய்ச்சலும் அதிகரித்தால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதனால், கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது, கொரோனா தடுப்புக்காக, வீடுகள்தோறும் ஆய்வு செய்ய, களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை வைத்து, வீட்டு வளாகத்தில் தேங்கிய நீரில் வளரும், டெங்கு பரப்பும் கொசுப்புழுக்களை அழிக்க, முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக, களப்பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

பாதிப்பு :

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வயதானவர்களை உயிரை பறிக்குமென்றால், டெங்கு, வயது வித்தியாசமில்லாமல் உயிரை பறிக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில், அழிக்க வேண்டியது முக்கியம். டெங்கு பரவினால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முழு கவனத்தை செலுத்தியதால், கொசு ஒழிப்புநடைபெறவில்லை. களப்பணியாளர்கள் மற்றும் மலேரியா ஊழியர்களை வைத்து, டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை