வெட்டுக்கிளிகளை அழிக்க, 'ட்ரோன்' மூலம் பூச்சிக்கொல்லி

தினமலர்  தினமலர்
வெட்டுக்கிளிகளை அழிக்க, ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க, 'ட்ரோன்' உதவியுடன், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.


ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, ஜெய்ப்பூர் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. பயிர்கள் நாசமடைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், 'ட்ரோன்' உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு அருகே சமோத் பகுதிகளில், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து, வேளாண்துறை ஆணையர் ஓம் பிரகாஷ் கூறியதாவது:வெட்டுக்கிளிகளை அழிக்க, வாடகை ட்ரோனை பயன்படுத்தும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகள், கரடு முரடான பாதைகள் மற்றும் உயரமான பகுதிகளில், ட்ரோன்கள் பலனளிக்கும்.ஒரு ட்ரோன், 15 நிமிடத்தில், கிட்டத்தட்ட, 2.5 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லியை தெளித்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ராஜஸ்தானில் இருந்து, ம.பி., மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு வரவிருக்கும் வெட்டுக்கிளிகள், ஓரிரு நாட்களில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் வர வாய்ப்புள்ளது. இதனால், இம்மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக - கேரள எல்லையில் வெட்டுக்கிளி படையெடுப்பு


நீலகிரியை ஒட்டியுள்ள கேரளப் பகுதியிலும் வெட்டுக்கிளி கூட்டம், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழை, மா, இஞ்சி இலைகளை, வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால், சில நிமிடங்களில், அவை வெறும் தண்டுகளாக மாறி விடும் அளவுக்கு, இவற்றின் தாக்கம் அதிகரித்துஉள்ளது. இவற்றை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால், தமிழக எல்லையோர விவசாய கிராமங்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

மூலக்கதை