9/11 என்பது ஒரு அத்தியாயம்... கோவிட்- 19 என்பது ஒரு புத்தகம் மனிதர்களின் வாழ்க்கையையே கொரோனா புரட்டிப் போடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
9/11 என்பது ஒரு அத்தியாயம்... கோவிட் 19 என்பது ஒரு புத்தகம் மனிதர்களின் வாழ்க்கையையே கொரோனா புரட்டிப் போடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஹார்வார்ட் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஆஷிஷ் ஜா மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி ஜோகன் ஜீசெக் ஆகியோருடன் சமூக வலைதளம் மூலமாக கலந்துரையாடினார். அப்போது சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா கூறுகையில், ‘‘கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஓரு ஆண்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். வைரஸ் பரிசோதனைகள் பெரியளவில் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் பொது முடக்கத்துக்கு பின் பொருளாதாரம் திறந்தாலும், மக்களிடையே நம்பிக்கை பிறக்கும். கொரோனா வைரஸ் 12-18 மாத பிரச்னையாகும். அதனால், உலகமானது 2021ம் ஆண்டுக்கு முன்னதாக கொரோனாவை விட்டு வெளியே வர முடியாது” என்றார். இதேபோல், விஞ்ஞானி ஜோகன் ஜீசெக் கூறுகையில், “இந்தியாவில் மென்மையான லாக்டவுன் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்தியா இருக்கும் நிலையில் முடிந்தவரை மென்மையானதாக ஊரடங்கு இருக்க வேண்டும். இந்தியாவில் தீவிர ஊரடங்கை அமல்படுத்தினால் உங்களின் பொருளாதாரம் மிக விரைவான பேரழிவிற்கு செல்வதற்கு வழிவகுக்கும்,” என்றார். நிபுணர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி கூறுகையில், ‘‘கோவிட் 19 வைரஸ் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடப்படுகிறது. 9/11 (அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதல்) என்பது ஒரு புதிய அத்தியாயமாக இருந்தால், இது (கொரோனா பாதிப்பு) ஒரு புதிய புத்தகமாக இருக்கும்” என்றார்.

மூலக்கதை